CT Final | டேட்டிங்கா? யுஸ்வேந்திர சாஹலுடன் காணப்பட்ட பெண்.. யார் இந்த ஆர்.ஜே.மஹ்வாஷ்?
துபாயில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது பிரபல ஆர்.ஜே.மஹ்வாஷுடன் மூத்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் காணப்பட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
34 வயதான இந்த சுழற்பந்து வீச்சாளர் தற்போது தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற்றதால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்துவருகிறார். இந்த நிலையில், அவர், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது பெண் ஒருவருடன் காணப்பட்ட செய்தி பேசுபொருளாகி உள்ளது. விசாரணையில் அந்தப் பெண் பிரபல ஆர்.ஜே.மஹ்வாஷ் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்வாஷ் சாஹலுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டார், இது இருவருக்கும் இடையே டேட்டிங் வதந்திகளைத் தூண்டியது. என்றாலும் இந்த டேட்டிங் வதந்திகளை மஹ்வாஷ் மறுத்திருந்தார். தவிர, இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என வலியுறுத்தி இருந்தார். அதுபோல் சாஹலும் ’இதுபோன்ற செய்திகளில் ஈடுபட வேண்டாம்’ என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
யார் இந்த ஆர்.ஜே.மஹ்வாஷ்?
உத்தரப்பிரதேசத்தின் அலிகிராவில் பிறந்தவர் மஹ்வாஷ். முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர், புது டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிரபல யூடியூபரான அவர், தனது குறும்பு வீடியோக்களுக்காக பரவலாக அறியப்படுகிறார். மேலும் ஒரு புகழ்பெற்ற வானொலி தொகுப்பாளராகவும் உள்ளார். முன்னதாக அவர், பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸின் 14வது பதிப்பில் தோன்றும் வாய்ப்பையும், பாலிவுட்டில் இருந்து வந்த வாய்ப்பையும் கூட நிராகரித்திருந்தார்.