அடித்து நொறுக்கப்பட்ட சிக்சர் மன்னன் சாதனை.. ரிஷப் பண்ட் தான் இனி டாப்!
இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 128 ரன்கள் குவித்து, 6 சிக்சர்களுடன் பிரெண்டன் மெக்கல்லம்மின் சாதனையை முறியடித்தார். 108 சிக்சர்களுடன் 2வது இடத்தை பிடித்த பண்ட், SENA நாடுகளில் 50 சிக்சர்கள் அடித்த முதல் ஆசிய வீரராகவும், அனைத்து SENA நாடுகளிலும் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராகவும் வரலாறு படைத்தார்.
நியூசிலாந்து மண்ணில் நடைபெற்றுவரும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி 128 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஆட்டத்தால் 720 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.
இந்தப்போட்டியில் 6 சிக்சர்களை அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பிரெண்டன் மெக்கல்லம்மின் சாதனையை முறியடித்துள்ளார் பண்ட். அதிரடிக்கு பெயர் போன நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் 2வது இடத்திலிருந்த நிலையில், 108 சிக்சர்களுடன் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் பண்ட். முதலிடத்தில் 138 சிக்சர்களுடன் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார்.
அதேபோல SENA நாடுகளில் 50 சிக்சர்கள் அடித்த முதல் ஆசிய வீரராகவும் மாறி வரலாறு படைத்துள்ளார் பண்ட். இந்தப்போட்டியில் சதமடித்ததன் மூலம் அனைத்து SENA நாடுகளிலும் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் ரிஷப் பண்ட்டிடம் சென்றுள்ளது.

