எம்பியுடன் காதலில் விழுந்தது எப்படி? ரகசியத்தைப் பகிர்ந்துகொண்ட ரிங்கு சிங்!
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங், விரைவில் சமாஜ்வாதி கட்சியின் எம்பியான பிரியா சரோஜை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இந்தச் சூழலில் அவருடனான காதல் கதையை ரிங்கு சிங் நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இளம் எம்பியை மணக்கப்போகும் ரிங்கு சிங்!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், குஜராத் அணி வீரரும் அவருடைய நண்பருமான யாஸ் தயாள் பந்துவீச்சில் 5 சிக்ஸ் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமுதல் அதிரடி ஆட்டத்தை விளையாடிய அவர், விரைவிலேயே இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இந்த நிலையில், இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை, ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். வாரணாசியில் நவம்பர் மாதத்தில் அவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. முன்னதாக, அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 8ஆம் தேதி நடைபெற்றது. பிரியாவும் ரிங்குவும் தங்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை அணிவித்துக் கொண்டனர். அப்போது. பிரியா ஆனந்தக் கண்ணீர் வடித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், விரைவில் பிரியா சரோஜைக் கரம்பிடிக்க இருக்கும் ரிங்கு சிங், அவருடனான காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார்.
இளம் எம்பியுடன் காதல் பிறந்தது எப்படி? - ரிங்கு சிங் பதில்
நியூஸ்24 ஊடக நிகழ்வில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார். அதில், ”2022 கொரோனா காலக்கட்டத்தின்போதுதான் எங்களின் காதல் உருவானது. அப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் முகாமிட்டிருந்தேன். அந்தச் சமயத்தில், இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் பக்கம் ஒன்றில், பிரியாவின் புகைப்படம் பதிவிடப்பட்டு வாக்கு கோரப்பட்டிருந்தது. பிரியா சரோஜின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சகோதரி எடுத்துப் பதிவிட்டு வந்தார். அவர் என்னுடைய ரசிகரின் பக்கம் ஒன்றில் புகைப்படத்தைப் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக, அவரின் புகைப்படத்தை லைக் செய்துவிட்டேன். மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தபோது, அது சரியாக இருக்காது என்று நிறுத்திவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்குப் பின் பிரியா சரோஜ் என்னுடைய இன்ஸ்டா புகைப்படங்களை லைக் செய்திருந்தார். அதன்பின் நானே, நேரடியாக மெசேஜ் அனுப்பினேன். அப்படித்தான் எல்லாமே தொடங்கியது. ஓரிரு வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பேசத் தொடங்கிவிட்டோம். போட்டி தொடங்குவதற்கு முன், போட்டிக்குப் பின் என்று பேசிக் கொண்டே இருந்தோம். அதன்பின் எனக்குள் காதல் ஏற்பட்டது” என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஆரம்பத்தில் இருவரும் நிறையப் பேசினோம். ஆனால் இப்போது அது கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர், ஒரு மக்கள் பிரதிநிதியாய் தினந்தோறும் வேலைகளைச் செய்கிறார். நீங்கள் அவர் எவ்வளவு வேலை செய்கிறார் என்று அவருடைய இன்ஸ்டாவைப் பார்த்தால் தெரியும். அதனால் எங்களுக்குப் பேச அதிக நேரம் கிடைக்காது. இரவில் மட்டுமே பேசுகிறோம்" என அதில் தெரிவித்துள்ளார்.