‘பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா..’ வெளியான தகவல்!
ஐசிசியின் அடுத்த மிகப்பெரிய கோப்பையாக பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது 2025 பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறி இந்தியா பயணத்தை நிராகரித்த நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படவிருக்கின்றன.
1996 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் நடத்தும் முதல் ஐசிசி நிகழ்வு இதுவாகும், மேலும் 2025 சாம்பியன்ஸ் டிரோபியில் பாகிஸ்தான அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில் பங்கேற்க செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கும் ரோகித் சர்மா..
வெளியாகியிருக்கும் தகவலின் படி, பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க விழாவில் ரோகித் சர்மா கலந்துகொள்வார் என்று தெரிகிறது. இந்த தொடக்கவிழாவானது பிப்ரவரி 16 அல்லது 17-ம் தேதியில் நடைபெறவிருக்கிறது.
IANS மேற்கோள் காட்டியிருக்கும் தகவலின் படி, “29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஒரு மெகா சர்வதேச கிரிக்கெட் தொடர் திரும்புவதைக் குறிக்கும் வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு பிரமாண்டமான நிகழ்வைத் திட்டமிட்டிருப்பதால், சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய அணியின் கேப்டன் பாகிஸ்தானுக்குச் செல்வார்" என்று கூறப்படுகிறது.