CSK அணிக்கு பெரிய அடி.. காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது!
2026 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்தது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட வலது தொடை காயம் காரணமாக தற்போது கலீல் அகமது ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பலவீனமான பந்துவீச்சு பிரிவுக்கு இது பெரிய அதிர்ச்சியாகியுள்ளது.
2026 ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டியில் எதுவுமே சரியாக செல்லவில்லை. பந்துவீச்சில் குறைபாடு, பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட், மோசமான ஃபீல்டிங் என சொதப்பிக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி 2 போட்டிகளில் தான் கம்பேக் கொடுத்து அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்தது.
இந்தவெற்றிகளுக்கு முக்கிய காரணமாகவும், சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கியவர் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது. புதிய பந்தில், பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தும் பவுலராக சென்னை அணிக்கு கடந்த சீசனிலிருந்து சிறப்பாக செயல்பட்டுவரும் கலீல் அகமது, தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே பந்துவீச்சு யூனிட்டில் சென்னை அணி அவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லை என்ற சூழலில், தற்போது கலீல் அகமதுவும் விலகினால் மிகப்பெரிய அடி சிஎஸ்கேவிற்கு விழும்.
தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகல்..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பந்துவீசியபோது சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவுக்கு காயம் ஏற்பட்டது. மைதானத்திலிருந்து அவர் வெளியேறிய நிலையில், அவர் வீசிய ஓவரின் கடைசி பந்தை குர்ஜப்னீத் சிங் வீசினார்.
இந்தசூழலில் தான் தற்போது ஸ்கேனின் போது அவருக்கு வலது தொடைப்பகுதியில் காயம் இருப்பதாகவும், அவர் குணமடைய 10-12 வாரங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் விக்கெட்டை வீழ்த்தும் கலீல் அகமது போன்ற பவுலர் இல்லாமல் சென்னை அணி மீதமிருக்கும் தொடரை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் டெவால்ட் பிரேவிஸ் காயத்தால் 3 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது, தோனி இன்னும் அணிக்கு திரும்பாமல் இருந்துவருகிறார், ஒரே ஒரு டெத் ஸ்பெசலிஸ்ட் பவுலர் நாதன் எல்லீஸ் தொடரிலிருந்து விலகல், மாற்று வீரரான ஸ்பென்சர் ஜான்சனும் இதுவரை அணியில் இணையவில்லை என பல சிக்கல்களுக்கு இடையில் தற்போது கலீல் அகமதுவும் விலகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

