கண்ணீருடன் வெளியேறியது CSK.. தொடர்ச்சியாக 6 வெற்றி.. வரலாறு படைத்தது RCB!

நடப்பு ஐபிஎல் சீசனின் 68-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4 ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
 RCB- CSK
RCB- CSKPT

சென்னை, பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியின் ஆரம்ப கட்டத்தில், கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பு என்பது விண்வெளிவரை கூட கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வாழ்வா சாவா போட்டி என்பது போல் தான் இரு அணிகளும் களமிறங்கின. இதிலே “குறுக்க இந்த கௌசிக் வந்தா?” என்பதுபோல் மழையும் வருவேனா? மாட்டேனா? என காத்திருந்தது. அவரும் பாவம் தானே. மழை வேண்டும் என கேட்கும் மக்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாரா? அல்லது மழை வரக்கூடாது என கேட்கும் மக்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாரா? இதைத் தாண்டி தோனி கோலி விளையாடும் கடைசிப் போட்டி... சென்னை தோற்றால் தோனிக்கு கடைசிப் போட்டி என எமோசனல் டச் வேறு.. அப்பப்பா... போதும்ப்பா?

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நடந்தது போட்டி. டாஸ் ஜெயித்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முக்கியமான போட்டியில் டாஸ் வென்றுவிட்டோம் என சந்தோசப்படுவதா? அல்லது டாஸ் வென்றால் மேட்ச் தோற்கின்றனரே என வருத்தப்படுவதா என சென்னை ரசிகர்களின் வாய்ஸ்கள் இணையத்தில் பரவலாக காணப்பட்டது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கிங் விராட் கோலியும் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய இருவரும் 3 ஓவர்களிலேயே 31 ரன்களை எடுத்தனர்.

 RCB- CSK
கிங் கோலி.. சிக்சர் என்றாலும், ரன்கள் என்றாலும் கோலியே முதலிடம்...

ஆனால், மழை வந்தது. மழை வந்ததும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் 8.25 மணிக்கு தொடங்கியது. இதன் பின்னர் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பவர்ப்ளேவில் 3 ஓவர்களை வீசிய சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 31 ரன்களை வாரி வழங்கிய நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே மீண்டும் அதிரடிக்கு திரும்பினர் கோலி மற்றும் டுப்ளசிஸ்.

அதிரடியாக ஆடிய கோலி 9.4 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு சீசனில் அதிக சிக்சர்களை அடித்தவர்களது பட்டியலில் கோலி 37 சிக்சர்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். 36 சிக்சர்களை அடித்து இரண்டாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் உள்ளார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் 700 ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி. 14 போட்டிகளில் 708 ரன்களைக் குவித்து, சீசனில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அரைசதம் அடித்திருந்த டுப்ளசியும் எதிர்பாராத விதமாக வெளியேற, பின் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 218 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 54 ரன்களையும், கோலி 47 ரன்களையும், படிதார் 41 ரன்களையும் எடுத்திருந்தனர்.

சுமாராகவே பந்துவீசிய சென்னை அணியில் தாக்கூர் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் சாண்ட்னர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

219 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி ப்ளே ஆஃப்க்குள் செல்ல 201 ரன்களைக் கடக்க வேண்டும். இந்நிலையில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ். மிட்செலும் 4 ரன்னில் வெளியேற தடுமாறியது சென்னை. பின் வந்த ரஹானே, ரச்சினுடன் இணைந்து இருவரும் அசத்தலாக ஆடி அணியை மீட்டுக்கொண்டு வந்தனர். நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த ரஹானே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த துபே தடுமாறிய நிலையில், மறுபக்கத்தில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார் ரச்சின். ஐபிஎல் சீசனில் தனது முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார்.

 RCB- CSK
சென்னைக்கு 219 ரன்கள் இலக்கு.. ருதுராஜ் முதல் பந்திலேயே அவுட்...

எல்லாம் சிறப்பாகவே போனது. ஆனால், சின்ன தவறு செய்து சென்னைக்கே வில்லனாக மாறினார் துபே. deep backward square legல் ரச்சின் அடித்த பந்தில் இரண்டாவது ரன்னிற்கு துபே ஓடி வர, ரச்சின் ரன் அவுட்டானார்.. ஓடி வருவதற்கான கால் செய்தது என்னவோ ரச்சின் தான், ஆனாலும் துபேவும் ரச்சினை ஒரு முறை பார்த்திருக்க வேண்டும் தானே?

பின் வந்த வீரர்களும் தொடர்ச்சியாக தடுமாற, சென்னை அணி வெற்றி பெறாவிட்டாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்காவது தகுதி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்துகொண்டே இருந்தன.

கடைசி ஓவரில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 17 ரன்கள் வேண்டும் என்ற நிலை. யஷ் தயால் வீச தோனி முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு முயற்சிக்க, தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

முடிவில் 2 பந்துகளுக்கு 10 ரன்கள் எனும் நிலை. கடந்த சீசன் இறுதிப் போட்டியில் நிகழ்ந்தது மீண்டும் நிகழுமா என்று சென்னை ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்தனர். ஆனாலும் ஆட்டம் கைமீறிப் போய்விட்டது. சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி கெத்தாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்தது.

போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது ரச்சின் ரவீந்திராவின் ரன் அவுட் எனலாம்., துபேக்கு பந்துகள் சரியாக விழாதபோது ரச்சின் பந்துகளை சரமாரியாக அடித்து ரன்களை சேர்த்தார். அவரது விக்கெட் ஆட்டத்தையே மாற்றியது.

தொடரின் முதல் பாதியில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த பெங்களூரு அணி, தொடரின் பிற்பாதியில் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளது. இது பெங்களூரு அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றி. அந்த அணியின் ரசிகர்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி. சென்னை அணி தோற்றிருந்தாலும் பெங்களுருவின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com