பெங்களூரு மைதானத்தில் ஹாட்ரிக் தோல்வி.. தடுமாறும் மந்தனாவின் RCB அணி!
மகளிர் ஐபிஎல் எனக்கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரானது 3வது சீசனாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு சீசன்களை மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் வென்ற நிலையில், 3வது சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற ரேஸில் ’டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ்’ முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் 2025 மகளிர் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது.
சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி..
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இறுதிப்போட்டி மார்ச் 15-ம் தேதி மும்பையில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் அணியான ஆர்சிபி அணி, சீசனின் தொடக்கப்போட்டியில் குஜராத் ஜியண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 202 ரன்களை சேஸ்செய்து பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
அதன்பிறகு டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய ஆர்பி அணி, அவ்வணியை 141 ரன்னில் சுருட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
இப்படி முதலிரண்டு போட்டிகளில் பிரமாண்டமாக வென்ற ஆர்சிபி அணி, அடுத்த 3 போட்டிகளை அவர்களின் சொந்த மண்ணான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடியது. எப்படியும் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், 3 போட்டிகளில் வரிசையாக தோற்று மோசமாக விளையாடிவருகிறது ஆர்சிபி அணி.
முதலிரண்டு போட்டிகளில் டாப் ஆர்டர் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தத்தை கடத்தாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் பேட்டிங்கில் நிறைய குறைகளை வெளிக்காட்டியுள்ளது ஆர்சிபி அணி. அதிலும் உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 18 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியாமல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அதிலும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி அணி, பேட்டிங்கில் 8 ரன்களை அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது.
இப்படி ஹோம் ரசிகர்களுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் ஆர்சிபி அணி, அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு ஸ்டேடியத்தில் கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. அதில் வென்று கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கடைசி 3 லீக் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் (பெங்களூரு ஸ்டேடியம்), உபி வாரியர்ஸ் (லக்னோ ஸ்டேடியம்), மும்பை இந்தியன்ஸ் (மும்பை ஸ்டேடியம்) முதலிய அணிகளை எதிர்கொள்கிறது ஆர்சிபி. இதில் குறைந்தபட்சம் 2 போட்டிகளையாவது வென்றால் தான், கடைசி இடத்திற்காகவாது போட்டியிடம் முடியும் ஆர்சிபி அணி.