மீண்டும் களம் காணும் அஸ்வின்.. BBL, ILT20-ல் இரண்டிலும் விளையாட உள்ளதாக தகவல்!
இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளராக வலம்வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், டி20 போட்டிகளில் 7 எகானமியுடன் 317 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கும் அவர், பிபிஎல் மற்றும் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் இரண்டிலிருந்தும் விலகியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய கவனத்தை வெளிநாட்டு டி20 லீக்களுக்கு திருப்பியுள்ளார்.
யுஏஇ-ல் நடந்துவரும் சர்வதேச லீக் டி20 ஏலத்தில் பதிவுசெய்திருக்கும் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக்கிலும் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கல் இருந்தாலும் 2 லீக்கிலும் விளையாடும் அஸ்வின்..
யுஏஇ-ல் நடைபெறும் சர்வதேச லீக் டி20 தொடரானது 4வது பதிப்பை நோக்கி நகர்ந்துள்ளது. இதற்கான ஏலம் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அதிகப்படியான அடிப்படை விலைக்கு பதிவுசெய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச லீக் டி20 வரலாற்றில் 120,000 அமெரிக்க டாலர்களுடன், ஆறு இலக்க அடிப்படை விலையைக் கொண்ட ஒரே வீரராக அஸ்வின் பதிவுசெய்துள்ளார். அவரை எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டிவருவதாக தெரிகிறது. இத்தொடர் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறவிருக்கிறது. இதில் அஸ்வின் பங்கேற்றால் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாடும் அஸ்வினின் முதல் தொடர் இதுவாக இருக்கும்.
அதேபோல ILT20 லீக்கை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரிலும் அஸ்வின் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. டிசம்பர் 2-ல் ILT20 தொடங்கும் நிலையில், பிபிஎல் டிசம்பர் 14-ல் தொடரும் என சொல்லப்படுகிறது. இதனால் தேதி பிரச்னைகள் வரும் என்பதால் ஏதாவது ஒன்றில்தான் அஸ்வின் விளையாடுவார் என சொல்லப்பட்ட நிலையில், கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவர் இரண்டு லீக்கிலும் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது.
பிக்பேஷ் லீக்கை பொறுத்தவரையில் இரண்டு சிட்னி அணிகளும் அஸ்வினை அணிக்குள் கொண்டுவர ஆர்வம் காட்டுகின்றன. அதோடு, ரிக்கி பாண்டிங்கின் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் டிம் பெயினின் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளும் அஸ்வினை தங்களுடைய அணியில் விளையாட வைக்க விருப்பமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அஸ்வின் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.