”காட்டுமிராண்டித்தனம்” | பாக். தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்.. ரசீத் கான் கண்டனம்!
பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
5 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டதில் 3 கிரிக்கெட் வீரர்கள் இறந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ரசீத் கான் கண்டனம்..
ஆப்கானிஸ்தான் மீது எல்லைத்தாண்டிய வான்வழி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் நடவடிக்கையை காட்டுமிராண்டித்தனம் என குறிப்பிட்டிருக்கும் ரசீத் கான், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACB-ன் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.