4வது அணியாக Playoff சென்றது ராஜஸ்தான்.. பஞ்சாப் கிங்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது!
2026 ஐபிஎல் தொடரில் மும்பையை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், 205 ரன்கள் குவித்த சீரான பேட்டிங்கும் கட்டுப்பாட்டான பந்துவீச்சும் மூலம் ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்குப் பிறகு நான்காவது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் கடைசி இடத்துக்கான கடும் போட்டிக்கு முடிவுகொடுக்கப்பட்டது.
2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி 1 இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் முதலிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இந்தசூழலில் தான் பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடியது. கிட்டத்தட்ட ஒரு நாக் அவுட் போட்டியில் ராஜஸ்தான் அணி களம்கண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களின் சீரான பங்களிப்பால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்தது.
206 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய மும்பை அணியில் ரோகித் சர்மா 0, திலக் வர்மா 3, நமன் திர் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரிய விட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை மட்டுமே மும்பை அணியால் அடிக்க முடிந்தது.
30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி ஆர்சிபி, குஜராத், ஹைதராபாத் அணிகளை தொடர்ந்து 4வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆனால் நடப்பு சீசனின் தொடக்கத்தில் 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, வரிசையாக 6 போட்டிகளில் தோற்று தொடரிலிருந்தே வெளியேறி உள்ளது.

