சாம்பியன்ஸ் டிராபி | முதல் போட்டியிலேயே பெரிய அடி.. பலத்தை இழந்த நியூசிலாந்து! ரச்சின் இனி இல்லை?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா இடம்பெறவில்லை. இன்னும் அவர் முகத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமாகாத நிலையில், அவருக்கு பதிலாக வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரச்சின் ரவீந்திரா விளையாட மாட்டார்?
சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா, டீப்-பேக்வர்ட் ஸ்கொயர்-லெக்கை நோக்கி ஒரு ஷாட்டை அடித்த போது, கேட்சுக்காக நின்றிருந்த ரவீந்திரா வேகமாக முன்னேறிவந்ததால் கேட்ச்சை தவறவிட்டார். நல்ல வேகத்தில் வந்தபந்து அவருடைய முகத்தின் நெற்றியில் பலமாக தாக்கியதால், அந்த நொடியே ரத்தம் வழிய ஆரம்பித்தது. உடனடியாக அவருடைய முகத்தை துண்டால் மறைத்த மருத்துவக்குழு சிகிச்சைக்காக அழைத்துசென்றது.
வீரர்கள் மைதானத்தில் காயமடைவது இயல்பானது தான் என்றாலும், ரத்தம் வழிய வழிய ரச்சின் ரவீந்திரா வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ரச்சின் ரவீந்திரா நலமாக இருப்பதாக நியூசிலாந்து வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்று விளையாடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
டாஸ்ஸின் போது பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், எங்களுடைய அணியில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் துரதிருஷ்டமானவை, இருப்பினும் இருக்கும் இளம் வீரர்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதன்பொருள் ரச்சின் ரவீந்திரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 3 லீக் போட்டிகள் தான் என்ற நிலையில், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர் இல்லாதது நிச்சயமாக நியூசிலாந்துக்கு பெரிய பாதகமாக அமையப்போகிறது.
நியூசிலாந்து பிளேயிங் 11: டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (wk), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (c), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூர்க்
முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளது. யுங் அரசைசதம் விளாசியுள்ள்து. டெவின் கான்வே 10, வில்லியம்சன் 1, டேரில் மிட்செல் ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வில் யங் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார்.