நல்ல வாய்ப்பை கோட்டை விட்ட பஞ்சாப் அணி! தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்!இதுமட்டும் கூடவே கூடாது!
நடப்பு ஐஎபில் சீசனில் ரசிகர்களின் மனங்களை வென்ற அணி எது என்று கேட்டால் நிச்சயம் பலரும் பஞ்சாப் அணியை சொல்வார்கள். அதேபோல், ரசிகர்களின் மனதில் நின்ற கேப்டன் யார் என்று கேட்டால் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு ஸ்ரேயஸ் ஐயரை தான் சொல்வார்கள்.
அந்த அளவிற்கு பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் ஐயரும் இறுதிப் போட்டிக்கு முன்பாக பலரது இதயங்களை கொள்ளை கொண்டுவிட்டார்கள். பஞ்சாப் அணி வெல்ல வேண்டும் என்று பலரும் நினைப்பதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தது.
முதல் காரணம் பிரித்தி ஜிந்தா. ஆம், 2008 முதல் பல தோல்விகளை பஞ்சாப் அணி சந்தித்த போதும் துவண்டு போகாமல் தன்னுடைய அணியை தாங்கு தாங்கு என்று தாங்கினார். அவருக்காகவாவது பஞ்சாப் கிங்ஸ் கோப்பை வெல்ல வேண்டும் என்று பலரும் நினைத்தில் வியப்பில்லை. அடுத்து ஸ்ரேயஸ் ஐயருக்காக..
ஆம், கோப்பை வென்ற கேப்டனை எந்த அணியாவது தக்க வைக்காமல் இருப்பார்களா?... ஆம் அப்படியொரு அவமானம் ஸ்ரேயஸ்-க்கு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு கேப்டனாக இருந்து கொல்கத்தா அணிக்கு கோப்பை வென்று கொடுத்த போதும் அந்த அணி அவரை தக்கவைக்கவில்லை. அந்த வெறியோடு பஞ்சாப் அணிக்கு வந்து வெற்றிமேல் வெற்றிகளை குவித்து பலரது உள்ளங்களை வென்றார் ஸ்ரேயாஸ். இந்திய அணியிலும் அவர் ஓரம்கட்டப்படுவதாக நிலவி வரும் கருத்தும் அவர் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பலருக்கு வரவழைத்தது.
இப்படியான சூழலில் பஞ்சாப் அணிக்கு டாஸும் நல் வாய்ப்பாக அமைந்தது. ஆம், டாஸ் வெல்லும் அணிக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணியும் பீல்டிங்கில் நன்றாகவே செயல்பட்டது. ஒரே ஒரு கேட்ச் கோட்டைவிட்டதை தவிர பெரிதாக தவறு எதுவும் செய்யவில்லை. அகமதாபாத் மைதானத்தில் 220 ரன்கள் என்பதே பார் ஸ்கோர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் பெங்களூர் அணியை கட்டுப்படுத்தியது பஞ்சாப். பெங்களூரு அணியில் ஒரு வீரரை கூட அரைசதம் கூட அடிக்கவிடாமல் கடிவாளம் போட்டது.
எல்லாம் நன்றாகவே செல்ல பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது பஞ்சாப் கிங்ஸ். தோல்விக்கு முதல் காரணமே அழுத்தத்தை கையாள தெரியாமல் போனதுதான். முதல் ஓவரில் இருந்தே இறுதிப்போட்டிக்கான அந்த பிரஸரிலேயே பஞ்சாப் வீரர்கள் பேட்டிங் செய்தார்கள். பவர் பிளேவில் அந்த அழுத்தத்தை குறைத்து அதிரடியோடு ஆட்டத்தை தொடங்கி இருந்தால் நிச்சயம் அந்த வைப் கடைசி வரை இருந்து இருக்கும். இடையில் சில ஓவர்களை தவிற ஆட்டம் முழுவதுமே பெங்களூரு அணியின் கண்ட்ரோலின்தான் இருந்தது.
பஞ்சாப் தோல்விக்கு இரண்டாவது முக்கிய காரணம் நம்பிக்கையை விரைவிலேயே அவர்கள் இழந்ததுதான். பிரியான்ஷ் ஆட்டமிழந்த விதத்தை பார்த்தாலே தெரியும், கான்பிடண்ட் இல்லாத ஷாட் அது. மிக இயல்பாக ஷாட்களை அடிக்கக் கூடிய அவர் பயத்துடனேயே விளையாடி விரைவில் ஆட்டமும் இழந்தார். பிரப்சிம்ரனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்த போதும் பெரிதாக அவர் முயற்சிக்கவே இல்லை. மிகவும் இஸியாகவே கேட்ச் கொடுத்து பலரும் ஆட்டமிழந்தனர்.
தோல்விக்கு மற்றொரு முக்கியமான காரணம் அனுபவமின்மை. ஆம், இளம் வீரர்களை அதிகம் கொண்ட பஞ்சாப் அணிக்கு அது பலமாக இதுநாள் வரையில் பார்க்கப்பட்ட நிலையில் அதுவே பலவீனமாக அமைந்துவிட்டது. இக்கட்டான நேரத்தில் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு யாரும் அழைத்துச் செல்லவில்லை.
அதேபோல், நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததும் தோல்விக்கு முக்கியமான காரணமே. எல்லாரும் வருவதும் லட்டு மாதிரி கேட்ச் கொடுத்துவிட்டு செல்வதுமாகவே இருந்தார்கள். குறிப்பாக மிடில் ஓவர்களில் நல்ல பார்டனர்ஷிப் அமைந்திருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணிக்கு வெற்றி கைமேல் வந்து விழுந்திருக்கும். இத்தனைக்கும் ஒரு கட்டத்தில் 24 பந்தில் 55 ரன்கள் இருந்த நேரத்தில் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்து நல்ல வாய்ப்பை நழுவவிட்டார்கள்.
நிச்சயம் ஆர்சி கோப்பை வெல்ல வேண்டும் என்பதை இந்திய அளவில் பலரது எண்ணம் ஆக இருந்தது. ஆக, தன்னுடைய அசாத்திய வெற்றிகளால் போராட்ட குணத்தால் பஞ்சாப் கோப்பை வென்றாலும் நன்றாக இருக்கும் என்று எண்ண வைத்தவர் ஸ்ரேயஸ். ஆனால், கைமேல் கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.