ஐபிஎல்லுக்கு விளையாட வந்த ஜிம்பாப்வே வீரர்.. 2 ஆண்டு தடைவிதித்த PCB!
PSL ஒப்பந்தத்தை மீறி ஐபிஎல்லில் விளையாட ஒப்புக்கொண்ட ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசரபானிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டுகள் PSL-ல் விளையாட தடை விதித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஐபிஎல் மாதிரியான லீக் தொடர்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் வாரியமும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற பெயரில் லீக் தொடர் ஒன்றை தொடங்கியது. ஆனால், அது ஐபிஎல் போல மிகப்பெரிய வெற்றியை பெறாமல் சோபித்தது.
இந்த சூழலில், இந்த ஆண்டு PSL தொடரில் ஒப்பந்தமான சில வீரர்கள் அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, இலங்கை டி20 அணியின் கேப்டன் தசுன் ஷனகா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ஜிம்பாப்வேயின் முசரபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் இவர்கள் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், வீரர்கள் காயம் காரணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
2 ஆண்டு விளையாட தடை..
PSL தொடரில் ஒப்பந்தமான வீரர்கள் அதிலிருந்து விலகி ஐபிஎல் தொடரில் ஆட ஒப்புக்கொண்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், PSL தொடரில் இருந்து இப்படி வெளியேறும் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கடும் எச்சரிக்கை விடுத்தார். இரண்டு மூன்று வீரர்கள் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருகிறோம், PSL தொடரை ஒரு பாதுகாப்பு வலையாகப் பயன்படுத்திக் கொண்டு, ஐபிஎல் வாய்ப்பு வந்தவுடன் வீரர்கள் பாதியில் செல்வதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தசூழலில் தான் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் முசரபானிக்கு 2 ஆண்டுகள் பிஎஸ்எல்லில் விளையாட தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

