இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியாweb

’இதுதான்டா மேட்ச்சு..’ ருத்ரதாண்டவம் ஆடிய AUS! 352 ரன்கள் இலக்கை சேஸ்செய்து வரலாறு!

2025 சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்து புதிய சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
Published on

’இதுதான்டா மேட்ச்சு, யார் சாமி நீங்க, என்னடா நடக்குது இங்க’ என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் ஒரு தரமான ரைவல்ரி ஆட்டத்தை விளையாடியுள்ளன, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே இப்படி ஒரு ரன்சேஸிங் போட்டியை ரசிகர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அப்படியான ஒரு மாயாஜாலத்தை இரண்டு அணி வீரர்களுமே பேட்டிங்கில் வெளிப்படுத்தியுள்ளனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாகவும், வேறு காரணங்களுக்காகவும் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசல்வுட், ஸ்டொய்னிஸ், மிட்செல் மார்ஸ் எனப் பல நட்சத்திர வீரர்களை ஆஸ்திரேலியா தவறவிட்டது.

இத்தகைய சூழலில் ’இதுதான் இந்த பேட்ட பாயுற நேரம்’ என 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மரண அடி கொடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தியது இங்கிலாந்து அணி.

வரலாறு படைத்த பென் டக்கெட்..

லாகூரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவாகவே இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.

ஒருநாள் போட்டிகளில் ஜோ ரூட்டிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி கம்பேக் போட்டியாக அமைந்தது. அசத்தலாக ஆடிய அவர் 68 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுமுனையில் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய பென் டக்கெட் தனியொரு ஆளாக 165 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இது சாம்பியன்ஸ் டிராபியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக பதிவுசெய்யப்பட்டது.

eng vs aus
eng vs auscricinfo

அடுத்தடுத்து வந்த ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என அனைத்து வீரர்களும் சிக்சர், பவுண்டரிகள் துவம்சம் செய்ய 50 ஓவர்களில் 351 ரன்களை குவித்து மிரட்டியது இங்கிலாந்து அணி.

இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை குவித்து, 21 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. 2004-ல் நியூசிலாந்து அணி அடித்த 347 ரன்களே அதிகபட்ச டோட்டலாக இருந்த நிலையில், அதனை முறியடித்து புதிய வரலாற்றை எழுதியது இங்கிலாந்து.

நம்ப முடியாத வெற்றியை பதிவுசெய்த ஆஸ்திரேலியா..

பெரிய பிளேயர்கள் யாரும் இல்லை, எப்படியும் ஆஸ்திரேலியா தோற்றேபோகும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ”யார் இருந்தாலும், இல்லனாலும் நாங்க வர்றோம் தனியா, சும்மா கெத்தா” என ஒரு வரலாற்று சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஃபார்மில் இருந்துவரும் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் 6, 5 என சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். களத்தில் போராடிய லபுசனே மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் 47 மற்றும் 63 ரன்கள் அடித்த நிலையில் வெளியேற, 136 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

ஜோஸ் இங்கிலீஸ்
ஜோஸ் இங்கிலீஸ்

முக்கியமான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே, போட்டி அவ்வளவுதான் என அயர்ந்த நேரத்தில், ”இது லிஸ்ட்லயே இல்லையே” என ஒரு தரமான ஆட்டத்தை ஆடிய அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் இருவரும் 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட ஆஸ்திரேலியா ஆட்டத்திற்குள் மீண்டும் வந்தது. இதில் கைக்கு வந்த கேட்ச்சையும் கோட்டைவிட்ட இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அலெக்ஸ் கேரி 69 ரன்கள் அடித்து வெளியேற, 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஜோஸ் இங்கிலீஸ் 77 பந்துகளில் அதிவேக சதமடித்து மிரட்டிவிட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்ற இங்கிலீஸ் 86 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்த, 47.3 ஓவர்களில் இலக்கை எட்டி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா.

ஜோஸ் இங்கிலீஸ்
ஜோஸ் இங்கிலீஸ்

சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமில்லாமல், ஐசிசி தொடர்களிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காக சாதனை வெற்றியை பதிவுசெய்து வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா அணி.

இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும், பந்துவீச்சில் சிறந்த தொடக்கத்தை பெற்ற போதும் போட்டியை தவறவிட்டுள்ளது, இது கேப்டன்சியில் குறை இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. ‘பேசாம நீங்க வீட்டுக்கே திரும்பி போயிடுங்க இங்கிலாந்து பாய்ஸ்’ எனும் அளவிற்கு என ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com