இந்தியா vs பாகிஸ்தான்| பந்துவீச்சில் அசத்திய ஹர்திக், குல்தீப்! 241 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாய் என ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிவை பெற்றுள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய அணிகள் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் ஐந்தாவது லீக் போட்டியில் மிகப்பெரிய ரைவல்ரியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
241 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான்..
துபாயில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வுசெய்ய, இந்திய அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் இமாம் உல்-ஹக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விரட்டிய பாபர் அசாம் சிறந்த டச்சில் தெரிய, அது இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக மாறியது. ஆனால் எப்போதும் பார்ட்னர்ஷிப்களை பிரிக்கக்கூடிய பவுலராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா, ஒரு சிறந்த பந்தை வீசி பாபர் அசாமை 23 ரன்னில் வெளியேற்றினார். உடன் இமாம் உல்-ஹக்கும் ரன் அவுட்டில் வெளியேற, குறைவான நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.
ஆனால் 3வது விக்கெட்டுக்கு கைகோர்த்த சவுத் ஷக்கீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.
எப்படியும் 280 ரன்களை பாகிஸ்தான் எட்டும் என்ற நிலை இருந்தபோது, அதுவரை நிதானமாக விளையாடிய இருவரும் நிதானத்தை இழந்து கேட்ச்சை கொடுத்துவிட்டு வெளியேறினர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட குல்தீப் யாதவ் 2 பந்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, பாகிஸ்தானை மொத்தமாக பேக்ஃபுட்டில் தள்ளினார்.
முடிவில் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சவுத் ஷக்கீல் 62 ரன்களும், முகமது ரிஸ்வான் 46 ரன்களும் அடித்தனர். சிறப்பாக பந்துவீசிய குல்தீப் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, அக்சர், ஹர்ஷித் மூன்று பேரும் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.