78-க்கு 7 விக்கெட்டுகள் சரிவு.. பலம்வாய்ந்த இங்கிலாந்தை திணறடித்த பாகிஸ்தான்! IND-க்கு சாதகம்!
மகளிர் உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை திணறடித்துள்ளது பாகிஸ்தான் மகளிர் அணி..
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து அணியும், மூன்றிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
78/7 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து..
கொழும்புவில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். தொடக்க வீராங்கனை டாமியை போல்டாக்கி டயனா வெளியேற்ற, கடந்த போட்டியில் சதம் விளாசிய நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் எமி ஜோன்ஸ் இருவருடைய ஸ்டம்பையும் தகர்த்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா மிரட்டிவிட்டார்.
அடுத்தடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேற 76 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
25 ஓவருக்குள் 117 டாட் பந்துகளை சந்தித்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் 76/7 என ஆஸ்திரேலியாவை பதம்பார்த்தது. ஆனால் நட்சத்திர வீரர் பெத் மூனி ஒருமுனையில் நின்று சதமடித்து ஃபட்டிங் ஸ்கோருக்கு எடுத்துசெல்ல பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்தமுறை இங்கிலாந்தின் டாப் 7 பேட்டர்களையும் பாகிஸ்தான் அவுட்டாக்கி சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை இந்தப்போட்டியில் இங்கிலாந்து தோற்றால், அது அடுத்தப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியாவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். இங்கிலாந்து அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.