30 ஆண்டில் முதல் சதம்.. கங்குலிக்கு பின் 2வது வீரர்.. தமிழக வீரரின் கனவை சிதைத்த படிக்கல்!
இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 இடத்தில் ராகுல் டிராவிட், கங்குலி, புஜாரா போன்ற தலைசிறந்தோர் விளையாடிய நிலையில், புஜாரா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கான தேடல் தீவிரமானது. கம்பீர் காலத்தில் சாய் சுதர்சன் நம்பர் 3க்கு பார்க்கப்பட்டாலும், தேவ்தத் படிக்கல் வெளிநாட்டில் சதம் அடித்து 30 ஆண்டுக்குப் பிறகு இடதுகை நம்பர் 3 வீரராக வரலாறு படைத்து, சுதர்சனின் கனவை சிதைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 3 வீரருக்கான இடத்தில் ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, வினோத் காம்ப்ளி, சட்டீஸ்வர் புஜாரா போன்ற தலைசிறந்த வீரர்களே விளையாடியுள்ளனர்.
சட்டீஸ்வர் புஜாரா இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அணியின் சிறந்த வீரர்கள் மட்டுமே விளையாடும் நம்பர் 3 வீரருக்கான தேடலில் இந்தியா தீவிரமாக இருந்தது. இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருகைக்கு பின், நம்பர் 3 இடத்துக்கான நிரந்த வீரராக சாய் சுதர்சனே பார்க்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் சுதர்சன் 3 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ரன்கள் 87 ஆகும்.
இந்தசூழலில் தற்போது நம்பர் 3 வீரராக களமிறங்கி முதல் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்திருக்கும் படிக்கல், சாய் சுதர்சனின் கனவை உடைத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் சிறந்த ஃபார்மில் இருக்கும் படிக்கல் இரட்டை சதத்தை பதிவுசெய்தால் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற சாய் சுதர்சனின் கனவு நிரந்தரமாக அடைக்கப்படும் என்றே தெரிகிறது.
30 ஆண்டில் முதல் சதம்..
இந்திய அணியில் நம்பர் 3 வரிசையில் விளையாடும் இடது கை வீரர் ஒருவர் வெளிநாட்டுகளில் சதம் விளாசுவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கங்குலிக்கு பிறகு வெளிநாட்டு ஆடுகளங்களில் சதமடிக்கும் முதல் இடதுகை நம்பர் 3 வீரராக சாதனை படைத்துள்ளார் படிக்கல்.
அதுபோல 2024ஆம் ஆண்டிலிருந்து நம்பர் 3 வீரர் சதமடிக்காமல் 35 போட்டிகளில் இந்தியா விளையாடியிருந்த நிலையில், அந்த மோசமான ஓட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் தேவ்தத் படிக்கல்.

