சதமடித்த மகனை கட்டிப்பிடித்து அழுத தந்தை.. பிசிசிஐ பகிர்ந்த சிறப்பு வீடியோ!
“எல்லோரை போலவும் நானும் பொறுப்புகளை உணராத ஒரு சிறுவனாகத்தான் இருந்தேன், ஆனால் எனக்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்ட என் தந்தை ஒருநாள் பணப்பிரச்னையால் அழுதுகொண்டிருந்ததை பார்த்தபிறகுதான், நான் இப்படி இருக்க கூடாது என்பதை நானே புரிந்துகொண்டேன்”
நிதிஷ்குமார் ரெட்டி
ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 171 பந்துகளில் முதல் சர்வதேச சதமடித்த இந்தியாவின் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி, குறைந்த வயதில் ஆஸ்திரேலியாவில் அறிமுக சதமடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் 8வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரராகவும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கபில்தேவ், விரேந்தர் சேவாக், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே உடன் இணைந்து அசத்தியுள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி.
நிதிஷ்குமார் ரெட்டியை கட்டிப்பிடித்து அழுத குடும்பம்..
நிதிஷ்குமார் ரெட்டி சதமடித்த பிறகு இந்திய அணி ஃபால்லோவ் ஆனில் இருந்து தப்பித்துள்ளது, இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சரிசமமான நிலையில் இருக்கின்றன. இந்தியாவை இன்னும் WTC பைனலுக்கு செல்லும் ரேஸில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நிதிஷ்குமார் ரெட்டியை இந்திய ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வரலாற்று டெஸ்ட் சதத்தை அடித்த நிதிஷ்குமார் ரெட்டியை நேரில் சந்தித்திருக்கும் அவருடைய குடும்பம், அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. இதனை பிசிசிஐ வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் நிதிஷ்குமார் ரெட்டியின் தந்தை, தாய், சகோதரி என அனைவரும் உணர்ச்சிபெருக்கில் காணப்பட்டனர். அவருடைய தந்தை பேசுகையில், “நிதிஷ்குமார் இன்று சிறப்பாக விளையாடினார். ஒரு கடுமையான பயணத்திற்கு பிறகு, நாங்கள் பெருமையுடன் இருக்கிறோம்” என்று கூறினார். அவருடைய சகோதரி பேசுகையில், “அவர் இந்த இடத்திற்கு நிறைய கடினங்களை கடந்துதான் வந்துள்ளார், அவர் முன்பு சொன்னதை இப்போது செய்து காட்டியுள்ளார்” என்று கூறினார்.