மகனுக்காக அனைத்தையும் இழந்து கண்ணீர்விட்ட தந்தை.. யார் இந்த நிதிஷ்குமார் ரெட்டி? #InspirationStory
“எல்லோரை போலவும் நானும் பொறுப்புகளை உணராத ஒரு சிறுவனாகத்தான் இருந்தேன், ஆனால் எனக்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்ட என் தந்தை ஒருநாள் பணப்பிரச்னையால் அழுதுகொண்டிருந்ததை பார்த்தபிறகுதான், நான் இப்படி இருக்க கூடாது என்பதை நானே புரிந்துகொண்டேன்”
நிதிஷ்குமார் ரெட்டி
உங்களுடைய உயர்வுக்காக ஒருவர் அனைத்தையும் இழந்துவிட்டு பக்கபலமாக நிற்கிறார்கள் என்றால், உங்களால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு நிதிஷ்குமார் ரெட்டி ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளார். இதை அவர் எளிதாக எட்டிவிடவில்லை, தன்னுடைய தந்தையின் அர்ப்பணிப்புக்காக தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளார் நிதிஷ்குமார் ரெட்டி.
“யாருடைய கதையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவரவரே ஹீரோவாக இருப்பார்கள், ஆனால் நிதிஷ்குமார் ரெட்டியின் கதையில் அவருடைய தந்தை முத்தியாலாதான் ஹீரோ”
நிதிஷ்குமார் ரெட்டியின் சிறுவயது பயிற்சியாளர் குமார சுவாமி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர்கள் அனைவரும் கைவிட்ட பிறகு, 21 வயதில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சர்வதேச சதமடித்த நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியை பார்டர் கவாஸ்கர் தொடரில் உயிர்ப்புடன் வைத்துள்ளார். 8வது வீரராக களமிறங்கி ஒரு அசாத்தியமான இன்னிங்ஸை ஆடிய நிதிஷ், 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 171 பந்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிஷப் பண்ட்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இளம் வயதில் மெய்டன் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தந்தையின் தியாகத்தில் தொடங்கிய நிதிஷ் குமார் ரெட்டியின் பயணம்!
2003-ம் ஆண்டு மே 26-ம் தேதி விசாகப்பட்டினத்தில் பிறந்த நிதிஷ் ரெட்டியின் கிரிக்கெட் பயணம் அவருடைய 5 வயதில் இருந்து தொடங்கியது. அவர் பள்ளியை விட்டுவிட்டு நேராக ஹிந்துஸ்தான் ஜிங்க் மைதானத்திற்கு சென்று, திறமையான வீரர்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைபோலவே அவரும் விளையாட முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்ந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்த தந்தை முத்தியாலா மகனின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அவருடைய வாழ்க்கையை கிரிக்கெட்டாக மாற்றவேண்டும் என்ற அனைத்து முயற்சியையும் எடுத்துள்ளார். மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக அனைத்தையும் செய்த தந்தை முத்தியாலா, தன்னுடைய வேலையை 20 வருட உழைப்பு மீதமிருக்கும் முன்பே விட்டுவிட்டார். மகனை பயிற்சிக்காக எங்குவேண்டுமானாலும் அழைத்துச்செல்ல வேண்டும் என நினைத்த அவர், தான் அருகேலேயே இருந்து அதைசெய்ய வேண்டும் என நினைத்தவர், மகனின் பயிற்சிக்காக குடும்பத்துடன் இடம்மாற்றிகொண்டு செல்வதையும் செய்துள்ளார்.
ஆனால் எதையும் பெரிதாக உணராமல் ஏதோ நம்மால் வருவதை விளையாடுவோம் என்று நினைத்த நிதிஷ்குமார் ரெட்டி, 2013-ம் ஆண்டு தன்னுடைய 10 வயதில் மாவட்ட அளவில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோதும் சரியாக விளையாடவில்லை. அதனால் அவருடைய தந்தையை அழைத்த பயிற்சியாளர் குமார சுவாமி, உங்கள் மகனுக்கு கிரிக்கெட்டெல்லாம் சுத்தமாக வராது, நீங்கள் அவருக்கு படிப்பை சரியாக சொல்லிக்கொடுங்கள் என்று அனுப்பியுள்ளார்.
அதேபோல, ‘எதற்காக மகனுக்காக இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள்?’ என குடும்ப உறவினர்கள் ஒருபுறம் கேள்வி கேட்கவே, ‘வேலையை விட்டுவிட்டீர்கள்.. எப்படி வாங்கிய கடனை அடைப்பீர்கள்?’ என கடன் கொடுத்தவர்கள் ஒருபுறமும் கேள்வி கேட்டுள்ளனர். இப்படி பல்வேறு நெருக்கடிகளை கண்ட முத்தியாலா ரெட்டி, ஒருநாள் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அதைப்பார்த்த நிதிஷ்குமார் ரெட்டி, தனக்கு பின்னால் எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு, தியாகம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.
176 சராசரியுடன் 1237 ரன்கள் குவித்த நிதிஷ்குமார் ரெட்டி..
தந்தையின் கண்ணீருக்கு பிறகு தன்னை நிரூபிக்க நினைத்த நிதிஷ்குமார் ரெட்டி, அங்கிருந்து தன்னுடைய பேட்டிங் திறமையை வெள்ளிக்காட்ட ஆரம்பித்தார். தன் மகனின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த தந்தை முத்தியாலா அவருக்கு தீவிர பயிற்சியை வழங்க விசாகப்பட்டினத்தில் உள்ள முனிசிபல் ஸ்டேடியத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு அவர் அதிவேகத்தில் வீசிய தரமான வேகப்பந்துவீச்சாளர்களையும், தந்திரமான சுழற்பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு தன்னை பட்டைத்தீட்டினார்.
இப்போது நிதிஷ்குமாரின் ஆட்டத்தை பார்த்த பயிற்சியாளர் குமார சுவாமி, அவரின் திறமையை பார்த்து அசந்துபோனார். இப்போது 13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அணியில் தேர்வானாலும், நிதிஷுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் விளையாட முடியாமல் போனது. அவரை தேர்வுசெய்த பயிற்சியாளருக்கும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தமுறை தந்தைக்காக மட்டுமில்லாமல் பயிற்சியாளருக்காகவும் தன்னை நிரூபிக்க நினைத்த நிதிஷ்குமார் ரெட்டி, ஒரு தரமான கம்பேக் மூலம் 140 ரன்கள், 99 ரன்கள் என குவித்து அசத்தி, 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதற்குபிறகு 16 வயதில் 2017-18 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் 176.41 சராசரியில் 1237 ரன்களைக் குவித்த நிதிஷ்குமார் ரெட்டி, தன்னுடைய திறமையால் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அங்கு அவர் 366 பந்துகளில் 441 ரன்களை குவித்து மிரட்டினார். அவர் மீதுவைத்த நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்த பயிற்சியாளர் குமார சுவாமி, 1237 ரன்களை குவித்த பிறகு நிதிஷ்குமார் ரெட்டியிடம் கையெழுத்து வாங்கியதாக பெருமையுடன் தெரிவிக்கிறார். அவருடைய இந்த அபாரமான ஆட்டம் 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பிசிசியின் விருதை பெற்றுக்கொடுத்தது.
இந்திய அணியில் அறிமுகம்..
2020-ம் ஆண்டு 17 வயதில் கேரளாவுக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டி மூலம் முதல் தர போட்டிகளில் அறிமுகம் பெற்றார் நிதிஷ்குமார் ரெட்டி. அங்கு அவர் 17 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 20.96 சராசரியில் 566 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமில்லாமல் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
2021-ல் லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகமான நிதிஷ், 22 போட்டிகளில் 36.63 சராசரி உடன் 422 ரன்கள் குவித்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023-24 ரஞ்சி சீசனில், ஏழு போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 366 ரன்கள் எடுத்த அவர், 2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமாகி தன்னுடைய அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவருடைய கவனத்தையும் பெற்றார்.
2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட குடலிறக்கம் காரணமாக அவரால் அறிமுகத்தை பெறமுடியவில்லை. பின்னர் 21 வயதான நிதிஷ், அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அங்கு அவர் இரண்டாவது டி20 போட்டியில் முதல் சர்வதேச அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
அங்கிருந்து இந்தியாவுக்கான பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தன்னுடைய ரோல் மாடலான விராட் கோலியின் கைகளில் இருந்து கேப்பை பெற்றார் நிதிஷ்குமார் ரெட்டி. பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுத்தை பெற்ற அவர், தற்போது மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து ஹீரோவாக மாறியுள்ளார்.
தன்னுடைய மகனின் டெஸ்ட் அறிமுகம் குறித்து பேசியிருக்கும் தந்தை முத்தியாலா, “அவர் முதலில் வந்து என்னிடம் நான் இந்தியாவிற்காக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகிறேன் என்று சொன்னபோது, நான் அப்படியே உறைந்துவிட்டேன். நீ உண்மையைதான் சொல்கிறாயா என்று மீண்டும் அதை தெளிவுபடுத்திக்கொண்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பந்துவீச்சை மெருகேற்றிக்கொண்ட நிதிஷ்குமார்..
பேட்டிங்கில் சிறப்பாக இருந்தாலும் ஒரு ஆல்ரவுண்டராக இருந்தால்தான் தனக்கு போட்டியான கிரிக்கெட் உலகில் இடம்கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட நிதிஷ்குமார் ரெட்டி, தன்னுடைய பந்துவீச்சை மெருகேற்றிக்கொள்ள அனைத்தையும் செய்துள்ளார். 14 வயதில் நிதிஷ்குமாரின் பந்துவீச்சு திறமையை கண்டறிந்தவர் விஜய் வர்மா. நிதிஷ்குமார் ரெட்டியின் பந்துவீச்சு திறமையை கண்டறிந்த அவர், நீண்ட ஸ்பெல்களை வீசவைத்துள்ளார். அப்போது அவர் சோர்வடையும் போது, அதை சரிசெய்வதற்கான பயிற்சியையும் கொடுத்துள்ளார்.
நிதிஷ் தொடர்ந்து பந்துவீச்சில் இரண்டு ஆண்டுகள் கூடுபாவில் பயிற்சி பெற்றார். அங்கு வர்மா நிதிஷின் ஹெட் பொசிஷன் மற்றும் ரன்னப் போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி சரிசெய்துள்ளார். இப்போது நிதிஷ் குமார் ரெட்டியால் தொடர்ந்து 130 கிமீ வேகத்தில் வீசமுடியும் என்றும், சிலநேரம் 140கிமீ வேகத்திலும் வீசமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் வர்மா.
பின்னர் அங்கிருந்து ஐபிஎல்லுக்கு சென்ற நிதிஷ் குமார் ரெட்டி இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் பந்துகளை வீசுவதற்கு புவனேஷ்வர் குமாரிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளார்.
2023 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிதிஷ்குமாரை ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. அதற்கு முன்பு, 2021 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பவுலராக விளையாடியுள்ளார். அங்கு நிதிஷ்குமார் ரெட்டி அவரின் வேகத்தை மீட்டெடுத்தார்.
நிதிஷ்குமாரின் சிறந்த பண்பை போற்றும் தந்தை..
2025 ஐபிஎல் தொடருக்காக சன்ரைசர்ஸ் அணி நிதிஷ்குமாரை 6 கோடிக்கு தக்கவைத்திருக்கும் நிலையில், இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய பிறகு மற்ற ஐபிஎல் அணிகள் 15 கோடிக்கு மேலான பணத்திற்காக அவரை அழைத்துள்ளன. ஆனால் பெரிய ஆஃபர்களை மறுத்து நிதிஷ்குமார் சொன்ன வார்த்தைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் அவருடைய தந்தை முத்தியாலா ரெட்டி.
“15 கோடி ஆஃபர்களைப் பற்றி நான் அவரிடம் சொன்னபோது, நிதீஷ் என்னிடம் 'நமக்கு உயிரைக் கொடுத்தது யார், என் பெயர் எங்கிருந்து வந்தது?' என்று என்னிடம் மறுகேள்வி எழுப்பினார். நான் SRH என்று பதிலளித்தேன். அப்போது அவர் ‘நான் ஏன் அவர்களை விட்டுவிட வேண்டும்? எனக்கு அதிக பணம் கொடுக்கும் உரிமையாளருக்கு நான் வெளியேறினால், நான் ஒரு முறை தோல்வியடைந்தாலும், என்னை மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஆனால் SRH உடன் நான் இரண்டு மோசமான ஆட்டங்களை பெற்றிருந்தாலும் அவர்கள் என்னை ஆதரிப்பார்கள்’ என்று அவர் சொன்னது என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. அவர் இந்த பண்புடன் தொடர்ந்து முன்னேற வேண்டும் என நினைக்கிறேன்” என்று முத்தியாலா கூறியுள்ளார்.
மகனுக்காக தந்தையும், தந்தைக்காக மகனும் அர்ப்பணித்த இந்த அற்புதமான கிரிக்கெட் பயணம் பலபேருக்கு ஒரு உத்வேகமான பாதையாக அமைந்துள்ளது!