27 வருட வரலாற்றில் புதிய மைல்கல்.. ஒரே போட்டியில் சதமடித்த 2 நியூசி. வீரர்கள்! 320 ரன்கள் குவிப்பு!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாத நிலையில், அவருக்கு மாற்றுவீரராக வில் யங் களமிறக்கப்பட்டார்.
ரச்சின் ரவீந்திரா இல்லாதது நியூசிலாந்துக்கு பெரிய பாதகமாக அமையும் என எதிர்ப்பார்த்தபோது, மாற்றுவீரராக வந்த வில் யங் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தியுள்ளார்.
சதம் விளாசிய வில் யங், டாம் லாதம்!
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டெவான் கான்வே 10, கேன் வில்லியம்சன் 1 மற்றும் டேரில் மிட்செல் 10 ரன்கள் என விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங், 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி சதமடித்து அசத்தினார். அவருடைய கைக்கோர்த்த விக்கெட் டாம் லாதமும் அதிரடியாக விளையாட, 4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி அசத்தியது.
107 ரன்களுக்கு வில் யங் விக்கெட்டை இழந்து வெளியேற, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டாம் லாதம் (118*) அவருடைய சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இறுதியாக வந்து வெளுத்து வாங்கிய க்ளென் பிலிப்ஸ் 61 ரன்கள் அடித்து அசத்த, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்தது. 73 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி யங், மற்றும் லாதம் சதத்தால் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இதுவரை 3 நியூசிலாந்து வீரர்கள் மட்டுமே சதமடித்திருந்த நிலையில், 4வது மற்றும் 5வது வீரராக வில் யங், டாம் லாதம் இருவரும் சதமடித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே போட்டியில் 2 நியூசிலாந்து வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறை.
சாம்பியன்ஸ் டிராபியில் சதமடித்த நியூசிலாந்து வீரர்கள்:
1. லான்ஸ் கெய்ர்ன்ஸ் - 102* vs இந்தியா - 2000 (ஃபைனல்)
2. நாதன் அஸ்த்லே - 145* vs அமெரிக்கா - 2004
3. கேன் வில்லியம்சன் - 100 vs ஆஸ்திரேலியா - 2017
4. வில் யங் - 107 vs பாகிஸ்தான் - 2025
5. டாம் லாதம் - 118* vs பாகிஸ்தான் - 2025