சாம்பியன்ஸ் டிராபி | கராச்சியில் ஏற்றப்பட்ட இந்தியக் கொடி.. புகழும் கிரிக்கெட் ரசிகர்கள்!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பிப்ரவரி 19-ம் தேதியான இன்று முதல் தொடங்கப்பட்டு மார்ச் 09-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் உடன் இணைந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் முதலிய 7 அணிகள் விளையாடுகின்றன. இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவின் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் கராச்சி தேசிய மைதானத்தில், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட தொடரில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. ஆனால் இந்தியாவின் மூவர்ணக் கொடி மட்டும் இடம்பெறவில்லை.
இந்த சூழலில் அரசியல் பதட்டம் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராததை பாகிஸ்தான் வாரியம் விமர்சித்தது. ஆனால் அரசியல் பதட்டங்கள் காரணமாக தற்போது இந்தியாவின் கொடி ஏற்றப்படாமல் ஓரங்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மட்டும் கிரிக்கெட்டின் உணர்வை குறைத்து மதிப்பிடவில்லையா என ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
விமர்சனங்களுக்கு பிறகு ஏற்றப்பட்ட இந்திய கொடி..
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அனைத்து நாட்டு கொடிகளும் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஏற்றப்படுவது வழக்கமானது என்ற சூழலில், பாகிஸ்தானில் இந்திய கொடி ஏற்றப்படாதது பேசுபொருளாக மாறியது.
இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "முதலில், இந்தியக் கொடி அங்கே இருந்ததா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது அங்கே இல்லையென்றால், இந்தியக் கொடி இடம்பெற்றிருக்க வேண்டும். பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் அங்கே இருந்திருக்க வேண்டும்" என்று செவ்வாயன்று டெல்லியில் கூறினார்.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றன. இதுகுறித்து பதிவிட்டிருக்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், ”கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது. என்ன ஒரு தருணம், எங்களுக்கு பெரிய இதயங்கள் உள்ளன. நாங்கள் மலிவான செயல்களை செய்வதில்லை. இந்தியக்கொடி ஏற்றப்பட்டதுடன் இந்திய பத்திரிகையாளர்கள் 7 பேருக்கு பாகிஸ்தானுக்கு வர விசாவும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.