இந்திய வீரர்களுக்கு புதிய உடற்தகுதி சோதனை.. ப்ரோங்கோ எப்படி இருக்கும்?
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த பிசிசிஐ புதிய ப்ரோங்கோ சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரக்பி விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. 20, 40, 60 மீட்டர் ஓட்டங்களை இடைவெளி இல்லாமல் ஐந்து முறை ஓட வேண்டும். 1,200 மீட்டரை 6 நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். இது வீரர்களின் ஏரோபிக் திறனை மேம்படுத்தும்.
சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களின் உடற்தகுதித்திறன் நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்திய வீரர்கள் தங்கள் உடற்தகுதித்திறனை நிரூபிக்க முன்னர் யோ யோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 2 கிலோமீட்டர் ஓட்டம் உள்ளிட்டவை அடங்கிய யோ யோ சோதனை முன்னர் வீரர்களுக்கு நடத்தப்பட்டது. தற்போது புதிய உடற்தகுதித் தேர்வு முறையை கொண்டு வந்துள்ளார் இந்திய அணியின் உடற்பயிற்சியாளர் அட்ரியன் லெ ரூக்ஸ் (Adrian le Roux). இது ரக்பி விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட உடற்தகுதித் தேர்வாக உள்ளது. இந்த புதிய சோதனை வீரர்களின் ஏரோபிக் திறனை (aerobic capacity) மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் இம்முறையை ஏற்றுக்கொண்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, சில வேகப்பந்துவீச்சாளர்களின் உடற்தகுதி திருப்திகரமாக இல்லை என்பது கவனிக்கப்பட்டது. இதனால், வேகப்பந்துவீச்சாளர்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் நேரத்தைச் செலவிடுவதைக் குறைத்து, அதிக ஓட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று லெரூக்ஸ் விரும்புகிறார். ப்ரோங்கோ சோதனையில், ஒரு வீரர் 20 மீட்டர், 40 மீட்டர், மற்றும் 60 மீட்டர் எனத் தொடர்ச்சியாக ஐந்து சுழற்சி ஓட்டங்களை (shuttle runs) இடைவெளி இல்லாமல் ஓட வேண்டும். மொத்தம் 1,200 மீட்டர் தூரத்தை வீரர்கள் ஆறு நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். ரக்பி வீரர்களின் ஓட்டத்தை ஒத்து இது அமைந்திருக்கும்.