ரஞ்சிக்கோப்பை | ரஹானே சதம், ஷர்துல் 9 விக்கெட்டுகள்.. கெத்தாக SEMI FINAL சென்றது மும்பை!
2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காலிறுதி போட்டிகள் நடந்துவந்தன.
3 காலிறுதி போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், மும்பை, விதர்பா மற்றும் குஜராத் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
காலிறுதி போட்டியில் ஹரியானாவை எதிர்த்து விளையாடிய மும்பை அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை..
மும்பை மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தனுஷ் கோட்டியானின் 97 ரன்கள் இன்னிங்ஸ் உதவியால் 315 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய ஹரியானா அணி, கேப்டன் அன்கித் குமாரின் அதிரடியான சதத்தால் (136) முதல் இன்னிங்ஸில் 301 ரன்களை குவித்தது. சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி, கேப்டன் அஜிங்கியா ரஹானேவின் பிரிலியண்ட்டான சதம் (108) மற்றும் சூர்யாகுமாரின் (70) அரைசதத்தின் உதவியால் 339 ரன்கள் சேர்த்தது.
354 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஹரியானா அணி, ராய்ஸ்டன் டயஸ் (5 விக்கெட்டுகள்) மற்றும் ஷர்துல் தாக்கூரின் (3 விக்கெட்டுகள்) அபாரமான பந்துவீச்சால் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் 152 ரன்கள் வித்தியாசத்தில் காலிறுதியில் வென்ற மும்பை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
மும்பையை பழிதீர்க்குமா விதர்பா?
அரையிறுதியில் விதர்பா அணியை எதிர்த்து மும்பை விளையாடிவிருக்கும் நிலையில், கடந்த ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்கடித்த மும்பை அணிக்கு விதர்பா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
2023-24 ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது மும்பை அணி.