இந்தியா vs வங்கதேசம்| 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி.. ஜாகீர் கானின் ஆல்டைம் சாதனை உடைப்பு!
ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது நடப்பாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக வங்கதேச வீரர் தவ்ஹித் ஹ்ரிடோய் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்திய அணியை பொறுத்தவரையில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.
அதுமட்டுமில்லாமல் ஐசிசி தொடர்களில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜாகீர் கானின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் ஷமி.
ஐசிசி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஜாகீர் கான் 59 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், முகமது ஷமி 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி தொடர்களில் (WC + CT) அதிக விக்கெட்டுகள்:
* முகமது ஷமி - 60* விக்கெட்டுகள்
* ஜாகீர் கான் - 59 விக்கெட்டுகள்
* ஜவகல் ஸ்ரீநாத் - 47 விக்கெட்டுகள்
* ரவீந்திர ஜடேஜா - 43* விக்கெட்டுகள்
வங்கதேசம் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிவருகிறது.