சிஎஸ்கேவிற்கு எதிராக புதிய மைல்கல் சாதனை.. ரோகித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி அபாரம்!
ஐபிஎல் 19வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்தில் 28 ரன்கள் குவித்த விராட் கோலி, ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரராக புதிய மைல்கல்லை எட்டினார்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி தங்களுடைய முழுபலத்துடன் 2வது முறையாக கோப்பையை தக்கவைக்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மறுபக்கம் ஆர்சிபிக்கு சவால் கொடுக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சிறந்த அணிகளாக இருக்கின்றன.
இந்தசூழலில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 250 ரன்களை குவித்த ஆர்சிபி மரண அடி கொடுத்தது. தொடக்கத்தில் ஆர்சிபிக்கு எதிராக சென்னை அணி சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றியவர் விராட் கோலி தான். கோலியின் கேட்ச்சை தவறவிட்ட சிஎஸ்கே அணி, தங்கள் தலையில் தாங்களாகவே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது. ஒருவேளை கோலியின் கேட்ச்சை அந்த நேரத்தில் பிடித்திருந்தால், ஆர்சிபி அணி 250 ரன்களை குவித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். போட்டியில் மொமெண்ட்டம் சிஎஸ்கேவின் பக்கம் சென்றிருக்கும்.
இந்தசூழலில் நேற்றைய போட்டியில் 28 ரன்கள் அடித்த கிங் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டினார்.
கோலி படைத்த மைல்கல் சாதனை..
சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 18 பந்தில் 28 ரன்கள் அடித்த விராட் கோலி, ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரராக புதிய மைல்கல் சாதனையை படைத்தார்.
முதலிடத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக 1161 ரன்கள் குவித்த ரோகித் சர்மா இருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி சிஎஸ்கேவிற்கு எதிராக 1174 ரன்களை குவித்து சாதனை படைத்தார் விராட் கோலி. அதேபோல டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு எதிராகவும் கோலி 1000 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

