இந்தியாவை அவமதித்த பாக். வீரர்.. விதியை மாற்றி முதன்முறையாக ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்!
இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அவ்வணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2026 19ஆவது சீசனுக்கான முதல் போட்டி மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதேநேரத்தில், ஐபிஎல்லைப் போன்று இன்னும் சில நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் நடத்தப்படும் ’தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தி ஹண்ட்ரட் அணியில் இந்தியர்களுக்குச் சொந்தமாக சன்ரைசர்ஸ் லீட்ஸ், எம்ஐ லண்டன், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் ஆகியன உள்ளன. அந்த வகையில், தி ஹண்ட்ரட்டின் ஆறு ஆண்டு வரலாற்றில் இந்திய உரிமையாளர்கள் முதல் முறையாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏலத்தில் இந்திய ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை அணியான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பங்கேற்றது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் நேரடியாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார். இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ரூ.2.34 கோடிக்கு அந்த அணி வாங்கியது. இதன்மூலம் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதியை அந்த அணி முதல்முறையாக மாற்றியுள்ளது. அதாவது, இந்திய - பாகிஸ்தான் இருநாட்டு உறவுகள் தொடர்பாக, ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
அதேபோல தென்னாப்பிரிக்காவின் SA20 மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ILT20 ஆகிய இதர வெளிநாட்டு டி20 தொடர்களிலும் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் அந்த விதியை உடைத்து, இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததற்காக காவ்யா மாறனுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இணையத்தில் வைரலாகும் காவ்யா மாறனுக்கு எதிராக கமெண்ட்களும் அதிகரித்து வருகின்றன.
”தேசிய உணர்வை மதித்து பல ஆண்டுகளாக இந்திய அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வந்தன. ஆனால் பணமும் வெளிநாட்டு லீக்குகளும் படத்தில் நுழையும் தருணத்தில், அந்த முதுகெலும்பு மறைந்துவிடும். இந்திய உரிமையாளர், இந்திய பிராண்ட், பூஜ்ஜிய தேசிய முதுகெலும்பு. நாட்டைவிட லாபம் முக்கியம் என்றால் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் நடிப்பதை நிறுத்துங்கள்" என்று பயனர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், சில பயனர்கள், அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவத்தையும், இந்திய வீரர்களையும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்துள்ளார் என பழைய பதிவுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்திய ஒரு பாகிஸ்தான் வீரருக்கு, இந்திய நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அணியில் எடுப்பது தேசப்பற்றுக்கு எதிரானது என்கிற விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
27 வயதான அப்ரார் அகமது சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தி ஹண்ட்ரட் மகளிர் ஏலத்தில் எந்தவொரு பாகிஸ்தான் வீராங்கனைகளும் தேர்வு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
முன்னதாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில், அந்நாட்டு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அவர் அவ்வணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால், இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாடாத வங்கதேச அணி, அந்த தொடரையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

