டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி.. வெற்றிபெறும் அணியை கணித்த மைக்கேல் வாகன்!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் விளையாடிவருகின்றன.
11வது முறையாக டாஸை இழந்த ரோகித்..
2023 ஒருநாள் உலகக்கோப்பை மோதலுக்கு பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மிகப்பெரிய போட்டியில் மோதுகின்றன. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 11வது முறையாக டாஸ்ஸை இழந்தார். ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் டாஸ்ஸை இழந்த இந்திய அணி, தொடர்ச்சியாக 14வது முறையாக இன்றும் டாஸ் வெல்லாமல் இழந்துள்ளது. இது 16,384 டாஸ்ஸில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தொடங்கிய போட்டியில் 21 வயதில் சாம்பியன்ஸ் டிராபியில் அறிமுகத்தை பெற்ற ஆஸ்திரேலியா வீரர் கூப்பர் கானலி, முகமது ஷமியின் பந்தில் 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடைய விக்கெட்டை வீழ்த்த மற்ற பவுலர்கள் கடினப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தியின் கைகளில் ரோகித் சர்மா பந்தை கொடுக்க, அச்சுறுத்திய டிராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே வெளியேற்றி கலக்கிப்போட்டார் வருண் சக்கரவர்த்தி.
அதனைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர். இருப்பினும் லபுசனே 29 ரன்களில் ஜடேஜாவிடம் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மித் அரைசதம் கடந்தார். 27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஸ்மித் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்லீஸ் 11 ரன்களில் ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார்.
260 ரன்கள் எடுக்காவிட்டால்..
டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை விரைவாகவே ஆஸ்திரேலியா இழந்தபிறகு, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மைக்கேல் வாகன் எந்த அணிக்கு வாய்ப்பு என்பதை கணித்துள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “தற்போதைய நிலையில் இந்திய அணி விருப்பமாக அணியாக உள்ளது. 260 ரன்களுக்கு மேல் அடிக்காவிட்டால் ஆஸ்திரேலியா அணியால் இந்தியா மீது அழுத்தம் போட முடியாது” என்று கணித்துள்ளார்.