T20 WC 2026 | கடைசியாக இணைந்த UAE.. தகுதிபெற்ற 20 அணிகள் எவையெவை?
ஜப்பானை வீழ்த்தி, கடைசி அணியாக யுஏஇ அணி்யும் நுழைந்ததைத் தொடர்ந்து, மொத்தத்தில் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு 20 அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரிலும் கடந்த உலகக் கோப்பையைப்போலவே 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அந்த வகையில், போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கடந்த டி20 உலகக் கோப்பையில் டாப் ஏழு இடங்களைப் பிடித்ததன் மூலம் தற்போது இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றன. இதனைத் தொடர்ந்து தரவரிசை பட்டியில் அடிப்படையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. மறுபுறம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
அந்த வகையில், அமெரிக்கா பிராந்தியத்திலிருந்து கனடாவும், ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகளும், ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இருந்து நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் தகுதி பெற்றிருந்தன. இறுதியாக, கிழக்கு ஆசிய பிராந்திய பிரிவிலிருந்து நேபாள் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் தகுதிபெற்றிருந்தன.
இதே பிராந்தியத்தில் ஜப்பானை வீழ்த்தி, கடைசி அணியாக யுஏஇ அணி்யும் தகுதி பெற்றுள்ளது. மொத்தத்தில் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு 20 அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடமபெற உள்ளன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி. சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்றில், நான்கு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அதிலிருந்து வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவின் 5 மைதானங்களிலும், இலங்கையின் இரண்டு மைதானங்களிலும் நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்றால், இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.