indian team
indian teamShashank Parade

டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் டாப் 5 பிளேயர்கள் யார்?

ஒரு உலகக் கோப்பை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா.

17 வருடங்கள் கழித்து மீண்டும் டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்தியா. 2007ம் ஆண்டு முதன் முதலாக நடந்த டி20 உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடிய இந்திய அணி, அதன்பிறகு அதை வெல்ல முடியாமல் தவித்தது. சொல்லப்போனால் 11 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையும் வெல்ல முடியாமல் இருந்தது. அதற்கெல்லாம் இப்போது பார்படாஸில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ரோஹித் அண்ட் கோ. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா சாம்பியன் ஆவதற்குக் காரணமாக இருந்த அந்த டாப் 5 வீரர்கள் யார்?

1. ஜஸ்ப்ரித் பும்ரா

ஜஸ்ப்ரித் பும்ரா
ஜஸ்ப்ரித் பும்ராRicardo Mazalan

போட்டிகளில் - 8
விக்கெட்டுகள் - 15
எகானமி - 4.17
ஸ்டிரைக் ரேட் - 11.8
இந்த உலகக் கோப்பையிலேயே இவர் தான் சிறந்த வீரர் என்பதில் யாருக்கும் எந்த ஆச்சர்யமும் இருக்காது. ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு ஓவரும், ஒவ்வொரு பந்தும் அனலாய் வீசியிருக்கிறார் பும்ரா. பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் போட்டி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஃபைனல் என மிகமுக்கியமான போட்டிகளில் டெத்தில் அவர் வீசிய ஓவர்கள் தான் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துவந்தன. அவரது எகானமி இன்றைய காலகட்டத்தில் ஒருநாள் போட்டியில் கூட பௌலர்களால் பதிவு செய்ய முடியாதது! உலகின் தலைசிறந்த பௌலரின் கையில் உலகக் கோப்பையும், தொடர் நாயகன் விருதும் சேர்ந்தது கிரிக்கெட்டுக்கே பெருமை.

2. ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

போட்டிகள் - 8
ரன்கள் - 144
பேட்டிங் சராசரி - 48.00
விக்கெட்டுகள் - 11
எகானமி - 7.64
மூன்று மாதங்களுக்கு முன் இவர் அளவுக்கு எந்தவொரு கிரிக்கெட் வீரரும் நெருக்கையை சந்தித்திருக்கமாட்டார். ஐபிஎல் அரங்கில் அவர் சந்தித்ததையெல்லாம் மும்பையிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்த அவர், பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் பட்டையைக் கிளப்பினார். சூப்பர் 8 சுற்றுக்குப் பிறகு களமிறங்கிய போட்டிகளிலெல்லாம் அதிரடி காட்டி சூப்பர் பங்களிப்பைக் கொடுத்தார். பந்துவீச்சில் அனைத்து ஏரியாவிலும் கலக்கினார். வழக்கமாக அதிக ரன் கொடுப்பவர், இந்தத் தொடரில் சிக்கனமாகவும் பந்துவீசினார். தன் பெயரில் 2 மெய்டன்கள் சேருமளவுக்கு அற்புதமாகப் பந்துவீசினார் ஹர்திக்!

3. அக்‌ஷர் படேல்

அக்‌ஷர் படேல்
அக்‌ஷர் படேல்Ricardo Mazalan

போட்டிகள் - 8
ரன்கள் - 92
பேட்டிங் சராசரி - 23.00
விக்கெட்டுகள் - 9
எகானமி - 7.86
இந்த உலகக் கோப்பையில் அக்‌ஷர் இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஸ்குவாடிலேயே இடம்பெறமாட்டார் என்று கருதப்பட்டவருக்கு ஆரம்பத்திலிருந்து வாய்ப்பு கிடைக்க அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிராகவும் சரி, ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் சரி இந்திய டாப் ஆர்டர் சொதப்பியபோதெல்லாம் ஆபத்பாந்தவனாக களம்புகுந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். பந்துவீச்சிலும் ஜடேஜாவை விட அதிக தாக்கம் ஏற்படுத்தினார். குறிப்பாக அரையிறுதியில் பவர்பிளேவிலேயே இங்கிலாந்து அணியை திக்குமுக்காட வைத்தார் அக்‌ஷர். நிச்சயம் ஒரு சூப்பர் ஆல் ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்.

4. ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

போட்டிகள் - 8
ரன்கள் - 257
சராசரி - 36.71
ஸ்டிரைக் ரேட் - 156.70
ஒரு உலகக் கோப்பை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்திய அவர், சில கடினமான முடிவுகளையும் தைரியமாக எடுத்தார். பிளேயிங் லெவனில் 2 இடது கை ஸ்பின்னர்களைக் களமிறக்கியது, ரிஷப் பண்டை சூர்யாவுக்கு முன் களமிறக்கியது போன்ற அணியின் முடிவுகள் இந்தத் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் தன் முத்திரையைப் பதித்தார் ரோஹித். ஆஸ்திரேலிய பௌலர்களை அவர் அடித்த அடி இந்த உலகக் கோப்பை பார்த்திடாத ஒன்று. அரையிறுதியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இந்தியாவின் டாப் ஸ்கோரராகவும் திகழ்ந்தார்.

5. ஆர்ஷ்தீப் சிங்

ஆர்ஷ்தீப் சிங்
ஆர்ஷ்தீப் சிங்Ramon Espinosa

போட்டிகளில் - 8
விக்கெட்டுகள் - 17
எகானமி - 7.16
ஸ்டிரைக் ரேட் - 10.5
இந்தியாவின் டாப் விக்கெட் டேக்கர், இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது டாப் விக்கெட் டேக்கர்! வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம் என்று நினைத்திருந்த நிலையில் விக்கெட்டுகளாக அள்ளி அசத்தியிருக்கிறார் ஆர்ஷ்தீப். பவர்பிளே, டெத் என இரண்டு கட்டத்திலும் சிறப்பாகப் பந்துவீசினார். ஒவ்வொரு 11 பந்துக்கும் ஒரு விக்கெட் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லையே. விக்கெட் எடுப்பதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கட்டங்களில் டெத் ஓவர்களில் சிக்கனமாகப் பந்துவீசி இந்தியாவை வெற்றி பெறவும் வைத்திருக்கிறார். ஃபைனல் உள்பட!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com