உங்களுக்காக என்ன செய்துவிட்டார் தோனி? Raina பதிலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வு அறிவித்த பின்னணி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது. தோனி மனிதநேயமும் தியாக மனப்பான்மையும் ரெய்னாவை எவ்வாறு பாதித்தது, நட்புக்காக இதயத்திலிருந்து எடுத்த முடிவு, 2012 இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ரெய்னா ஆடிய அரைசதங்கள், தொடர்நாயகன் விருது போன்றவை சுருக்கமாக கூறப்படுகின்றன.
தல, சின்ன தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்கள் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா. இந்திய அணி மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணியிலும் ஒன்றாய் பயணித்து, டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்ட இவ்விருவரும் தசாப்தம் கடந்த நட்பை கொண்டுள்ளனர். தோனி மீதுகொண்ட நட்பின் காரணமாக, 2020ஆம் ஆண்டு தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய ஓய்வையும் அறிவித்தார் சுரேஷ் ரெய்னா. ஒருமுறை சிஎஸ்கே நிர்வாகத்தால் ரெய்னாவிற்கு ஏற்பட்ட அவமானத்தின்போது கூட தோனியே அதை சரிசெய்துவைத்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி தல-சின்னதல இருவரின் நட்பும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், ஏன் தோனி ஓய்வை அறிவித்தபோது நீங்களும் ஓய்வை அறிவித்தீர்கள்? அப்படி என்ன தோனி உங்களுக்கு செய்துவிட்டார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தன்னுடைய இதயத்திலிருந்து பதிலளித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
தோனி அப்படி என்ன செய்தார்..?
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா உடனான நேர்காணலில் பேசிய சுரேஷ் ரெய்னா, நான் இந்திய அணிக்காக இல்லாமல் தோனிக்காகவே சிறப்பாக விளையாட நினைத்தேன் என்று கூறினார். ஏன் அப்படி சொல்கிறீர்கள், தோனி அப்படி என்ன உங்களுக்கு செய்துவிட்டார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “நான் இந்திய அணிக்கு வந்தபோது, அவர் என்னை டாப் ஆர்டரில் களமிறங்க அனுமதித்தோடு, ‘நீ உன் ஆட்டத்தை விளையாடு, நான் உனக்குத் துணையாக இருப்பேன்’ என்று கூறினார். ஒரு கேப்டன் உங்களுக்காகத் தனது இடத்தைத் தியாகம் செய்யும்போது, நீங்கள் அவருக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் நினைப்பீர்கள் தானே, அதனால் தான் ‘நான் அவருக்காக அதைச் செய்ய வேண்டும்’ என்று நினைத்தேன்.
அதுமட்டுமில்லாமல் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு, அடுத்தடுத்த தொடர்களில் அணியின் செயல்பாடுகள் சறுக்கியபோது எம்.எஸ். தோனி மிகவும் கலக்கமடைந்தார். ‘நான் மஹி பாய்க்காக சிறப்பாக விளையாட வேண்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், அதன் பிறகு நாங்கள் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை நொறுக்கினோம். அதனால்தான் நான் அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை கூறினேன்” என ரெய்னா கூறியுள்ளார்.
ஏன் தோனியுடன் சேர்ந்து ஓய்வு அறிவித்தீர்கள்..?
அதேபோல தோனியுடன் சேர்ந்து நீங்கள் ஏன் ஓய்வை அறிவித்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரெய்னா, “தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் நானும் ஓய்வை அறிவித்துவிட்டு, மஹி பாயிடம் சென்று முடிந்துவிட்டது என கூறினேன். அதற்கு அவர் ‘நீ என்ன செய்துவிட்டாய்’ என அதிர்ச்சியடைந்தார். ஆனால் அவர் ஒரு மனிதராக எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவர் உங்களுக்காக இவ்வளவு தியாகம் செய்திருந்தால், பதிலுக்குக் கொடுக்கும் மனப்பான்மை உங்களிடம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சில விசயங்களை நீங்கள் இதயத்தால் சிந்திக்கிறீர்கள், ஒரு இடத்தில் உங்களுடைய இதயம் பிணைக்கப்பட்டிருக்கும்போது அது நட்பாக இருந்தாலும் சரி, அதற்காக நீங்கள் செய்வீர்கள். அப்படித்தான் எங்களுடைய நட்பின் மீதும் அந்த இதயம் இருந்தது, அது இப்போது மட்டுமில்ல எப்போதும் நிலைத்திருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
2011 உலகக்கோப்பைக்கு பிறகு 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் 5 போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசி தொடர்நாயகன் விருதை ரெய்னா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

