\
கே.எஸ். பரத்
கே.எஸ். பரத்BCCI

இந்தியாவே வேண்டாம்.. ஓய்வு அறிவித்த ஒரே மாதத்தில் அதிரடி முடிவு.. UAE-இல் விளையாடும் பிரபல வீரர்!

தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தனது 32-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Published on

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் விக்கெட் கீப்பர்-பேட்டரான கே.எஸ். பரத் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாடியவர் கே.எஸ்.பரத். குறிப்பாக ரிஷப் பண்ட், விபத்தில் சிக்கியபோது இந்திய டெஸ்ட் அணியில் இணைந்த கேஎஸ் பாரத், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 221 ரன்கள் எடுத்துள்ளார். 18 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும், ரஞ்சிக் கோப்பை தொடரில் 308 ரன்கள் குவித்து முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையும் இவரிடம் உள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தனது 32-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தச் சூழலில்தான், அதாவது ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் தொடரான 'இசிபி டூ-டே சாம்பியன்ஷிப்' தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, யுஏஇ-யின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ரெட்-பால் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் 2 நாட்கள் கொண்ட முதன்மைத் தொடராகும். இதில், ஒரு போட்டிக்கு தலா இரண்டு நாட்கள் வீதம், ஒருநாளைக்கு 80 ஓவர்கள் வீசப்படும்.

கே.எஸ். பரத்
“சச்சினைப் பாருங்க..” கோபப்படும் வைபவ் சூர்யவன்ஷி.. அறிவுரை வழங்கிய வாசிம் ஜாபர்!

இந்தத் தொடரில் பங்கேற்கும் நான்கு முதன்மை அணிகளில் ஒன்றான 'டீம் ஸ்டாலியன்ஸ்' அணியில் கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பர்-பேட்டராகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அலி நசீர், அன்ஷ் டாண்டன் போன்ற யுஏஇயின் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக ஓய்வு பெறும் இந்திய வீரர்கள், டி20 லீக் தொடர்களைத் தேர்வு செய்யும் நிலையில், பரத் தனது திறனைத் தக்கவைக்க நீண்டவடிவ உள்ளூர் தொடரைத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவரால் உடனடியாக அந்நாட்டு தேசிய அணிக்காக விளையாட முடியாது. ஐசிசி விதிகளின்படி, ஒரு முழுநேர உறுப்பினர் நாட்டில் இருந்து மற்றொரு அசோசியேட் நாட்டிற்கு மாறும்போது 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். கேஎஸ் பாரத் தனது கடைசி சர்வதேச போட்டியை கடந்த 2024 பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். இதன் அடிப்படையில், அவர் வரும் 2027 வரை காத்திருக்க வேண்டும்.

கே.எஸ். பரத்
“உனக்கு தைரியம் இருக்கா?” - ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்.. மீண்டும் கிளம்பும் பழைய பகை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com