“உனக்கு தைரியம் இருக்கா?” - ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்.. மீண்டும் கிளம்பும் பழைய பகை!
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இதுதொடர்பான வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங் அண்மையில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால், அவருக்கும் ஸ்ரீசாந்திற்கும் இடையிலான பழைய பகை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சமீபத்தில் 'தி லல்லன்தொப்' (Lallantop) ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது, ஸ்ரீசாந்திடம் அவரும் ஹர்பஜனும் பாக்ஸிங் உடையில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ஸ்ரீசாந்த், ஹர்பஜனுக்கு நேரடியாக சவால் விடுத்ததுடன், பாக்ஸிங் ரிங்கில் மோதி தங்களது கணக்கைத் தீர்த்துக் கொள்ளத் தயார் என்றும் அறிவித்தார். நேர்காணலில் பேசிய அவர் "இதே காட்சியை நிஜத்தில் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உங்களால் வர முடியுமா? ஹர்பஜனிடம்தான் நான் இதைக் கேட்கிறேன்.
அதே கையுறைகளை அணிந்து என்னுடன் மோத உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இது உங்களுக்கு நான் விடுக்கும் நேரடி சவால்” என ஸ்ரீசாந்த் சவால் விடுத்துள்ளார். மேலும் அவர், “என் உண்மையான உணர்வோடு உங்களை அழைக்கிறேன். நமக்குச் சுயமரியாதை இருந்தால், விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்துவிட்டு களத்திற்கு வாருங்கள். உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.

