எத்தனை விமர்சனங்கள்.. எத்தனை கிண்டல்கள், எத்தனை கேளிகள்...18 வருடங்களாக சுமந்த வலி..!
18 வருடங்களாக சுமந்த வலிக்கும், வேதனைக்கும் விடைகொடுக்கும் வாய்ப்புள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் களம் கண்டது பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதேபோல், ஐபிஎல் கோப்பையில் முதல் முறையாக பெயரை பதிக்கும் ஆசையில் களம் கண்டது ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த இறுதிப்போட்டியை காண திருவிழாவைப் போல் கூட்டம் களைகட்டியது.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார் பிலிப் சால்ட். ஆனால் 16 ரன்னில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன்பிறகு வந்த ஒவ்வொரு வீரரும் 20 - 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வண்ணமே இருந்தனர். அதனால் விராட் கோலி இன்று ஆங்கர் இன்னிங்ஸ் விளையாடினார். அதாவது எதிர்முனையில் இருக்கும் வீரர்களை அடிக்கவிட்டு அவர் தடுப்பாட்டம் ஆட்டினார். அதனால் பந்துக்கு இணையாகவே அவர் ரன்கள் எடுத்து வந்தார்.
மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் பட்டிதாரும் வந்த வேகத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருப்பினும் அவரும் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதற்கிடையில் நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே விளாசி 43 ரன்களில் ஆட்டமிழந்தார், முக்கியமான இறுதிப்போட்டியில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
கடைசி லீக் போட்டியில் பொளந்து கட்டிய ஜிதேஷ் சர்மா இந்தப் போட்டியில் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஆனால், 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெபெர்ட் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. முதல் 3 ஓவர்களை மோசமாக வீசிய அர்ஸ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய ஜேமிசன் கடைசி ஓவரை மோசமாக வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரும் 3 விக்கெட் சாய்த்தார். வைஷாக், ஒமர்சாய் இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 200 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்பிருந்த நிலையில் அதனை தவறவிட்டது பெங்களூரு அணி.
191 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன், பிரியான்ஸ் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதால் அழுத்தம் காரணமாக இருவரும் நிதானமாகவே விளையாடினர். அதிரடிக்கு பெயர் போன இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்றும் முயற்சியில் தடுமாறியது. இந்த தடுமாற்றம் காரணமாக பிரியான்ஸ் 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குர்ணால் பாண்ட்யா, யஷ் தயாள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியை நிலை குலைய வைத்தனர்.
அடுத்து கேப்டன் ஸ்ரேயஸ் களமிறங்கினார். கடந்தப் போட்டியைப் போல் இறுதிவரை நின்று பஞ்சாப் அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன்னில் ஆட்டமிழந்துர் ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கினார் ஸ்ரேயஸ். ரோமாரியோ ஷெப்பர்ட் அவரது விக்கெட்டை சாய்த்தார்.
ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த அதிர்ச்சி மீள்வதற்குள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு நீண்ட நேரம் நிலைத்து விளையாடிய ஜோஸ் இங்கிலிஷூம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 98 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப். அதன்பிறகும் யாரும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. ஷஷாங் சிங்க் மட்டும் தனி ஆளாக போராட மற்ற வீரர்கள் வருவதும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பதுமாக இருந்தனர்.
வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டொய்னிஸ் 6 ரன்னிலும், ஒமர்ஸாய் 1 ரன்னிலும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
ஷஷாங் சிங் கொடுத்த நம்பிக்கையால் ஒரு கட்டத்தில் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு சாதகமாக வந்தது. ஆம், கடைசி 4 ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் 55 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. நிச்சயம் இது அடிக்கக் கூடிய ஸ்கோர் தான். இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. ஆனால், 17 ஆவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை சாய்ததோடு வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 3 ஓவர்களில் 47 ரன்கள் என்ற எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், 18 ஆவது ஓவரை வீசிய யஷ் தயாள் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு ஒரு விக்கெட்டையும் சாய்த்து பெங்களூருவின் வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்தார்.
புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட வேண்டும். கடைசி ஓவரை வீசிய ஹசல்வுட் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆட்டத்தை முடித்தார். ஆம், முதல் இரண்டு பந்திலுமும் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. கடைசி 4 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை ஷஷாங் சிங் விளாசிய போதும் அது பயனில்லாமல் போனது. ஆம் இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மைதானத்தில் கண்ணீர் மல்க இருந்தார் விராட் கோலி. வெற்றி உறுதியானது அங்கேயே மண்டியிட்டு கண்கலங்கினார். 17 வருட போராட்டத்திற்கு பிறகு 18 ஆவது வருடத்தில் பரிசு கிடைத்திருக்கிறது. 2008 முதல் ஒரே அணியில் இருந்த விராட் கோலி பல அவமானங்களை சந்தித்தார். கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லாத நபர் என்ற விமர்சனம் அவர் மீது இருந்தது. எல்லா விமர்சனங்களுக்கும் பதில் கொடுக்கும் வகையில் அமைந்தது இந்தக் கோப்பை.
வாழ்த்துக்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...