247 ரன்கள் குவித்து குஜராத்தை பந்தாடிய KKR.. 3 அணிகளுக்கான டாப் 4 வாய்ப்பு உடைப்பு!
கேகேஆர் அணி 20 ஓவரில் 247 ரன்கள் குவித்து குஜராத் டைட்டன்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஃபின் ஆலன் 35 பந்தில் 93, ரகுவன்சி 82, காம்ரூம் க்ரீன் 52 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணியில் சுப்மன் கில் 85 ரன்கள் எடுத்தும் 218 ரன்களில் முடங்கினர். இந்த தோல்வி டாப் 4 போட்டியை மேலும் சூடுபடுத்தியது.
19வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிரட்டலான தொடக்கத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் போகப்போக மற்ற அணிகள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டு நடந்துவருகிறது.
அதிலும் 3 முறை சாம்பியன் அணியான கேகேஆர் அணி முதல் 6 போட்டிகளில் அனைத்திலும் தோற்று கடைசி இடத்தில் பின்தங்கியது பல அணிகள் டாப் லிஸ்ட்டை பிடிக்க வழிவகுத்தது. ஆனால் அடுத்த 6 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து கம்பேக் கொடுத்திருக்கும் கேகேஆர் மீண்டும் புள்ளிப்பட்டியலை தலைகீழாக திருப்பியுள்ளது.
247 ரன்கள் குவித்த கேகேஆர்..
நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் நாலாபுறமும் 10 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். ஆலன் 35 பந்தில் 93 ரன்கள் குவிக்க, அடுத்தடுத்து வந்த ரகுவன்சி 82 ரன்கள், காம்ரூம் க்ரீன் 52 என துவைத்தெடுக்க 20 ஓவரில் 247 ரன்கள் குவித்து மிரட்டியது கேகேஆர் அணி.
248 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 85 ரன்களும், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் அரைசதமடித்து போராடினாலும் அவர்களால் 20 ஓவரில் 218 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
டாப் 4-க்கான கதவு உடைப்பு..
புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்த ஆட்டத்தின் முடிவுக்கு பிறகு டாப் 4 பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு அதிகரித்துள்ளது.
கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிஎஸ்கேவை எதிர்த்து விளையாடவிருக்கிறது, அதில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தால் 16 புள்ளிகளுடன் இருந்தாலும் குஜராத் டைட்டன்ஸ் அணி ரன்ரேட்டில் பின்தங்க வாய்ப்புண்டு. ஒருவேளை அப்படி நடைபெற்றால் அடுத்த 3 போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் கீழிருக்கும் அணிகளுடன் விளையாடப்போகும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றிபெற்றால், அவர்கள் டாப் 4-க்குள் நுழைவார்கள்.
அதேபோல சிஎஸ்கே SRH, GT இரண்டு அணிகளையும் நல்ல ரன்ரேட்டில் வீழ்த்தினால் அவர்கள் GT-ஐ வெளியே அனுப்பிவிட்டு டாப் 4-க்குள் நுழைய வாய்ப்புண்டு. அதேபோல கடைசி இரண்டு போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெற்றாலும் அவர்களும் டாப் 4 இடத்தை நிரூபிப்பார்கள்.
இந்தசூழலில் குஜராத் அணியின் தோல்வி பல அணிகளுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

