PlayOff ரேஸில் இணைந்தது KKR.. தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி!
2026 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் ஒரு வெற்றியும் இல்லாமல் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தற்போது தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் ரேஸில் இணைந்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக நடந்துவருகிறது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்போது தொடர் தோல்வியை சந்தித்துவருகின்றன. சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி பாட் கம்மின்ஸ் திரும்பிய பிறகு தொடர் வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தான் முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றிகூட இல்லாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் பின் தங்கியிருந்த கொல்கத்தா அணி, தற்போது தொடர்ந்து 4 போட்டிகளில் வரிசையாக வென்று அசத்தியுள்ளது.
ஏற்கனவே பிளேஆஃப் செல்வதற்கான போட்டியில் SRH, RCB, PBKS, RR, GT, CSK அணிகள் இருக்கும் நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இணைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லியை எதிர்கொண்டு விளையாடியது கேகேஆர் அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி, கொல்கத்தாவின் அபாரமான பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்தது.
143 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய கேகேஆர் அணி ஃபின் ஆலனின் 47 பந்துகள் சதத்தால் 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. 10 சிக்சர்களை பறக்கவிட்ட பின் ஆலன் அசத்தினார்.
10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை பெற்றிருக்கும் கேகேஆர், மீதமிருக்கும் 4 போட்டிகளில் வென்றால் 17 புள்ளிகளுக்கு சென்று பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும்.

