இந்தியா எங்களை அவமதித்த போது.. ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா..? - முன்னாள் PAK வீரர் கேள்வி
2026 ஐசிசி டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுத்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாகிஸ்தானின் முடிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்களை ஐசிசி முன்கூட்டியே கவனிக்க வேண்டியிருந்தது என அவர் கூறினார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் பிப்ரவரி 7 தொடங்க இருக்கிறது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது. இது உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி, இதை உறுதிசெய்யும்பட்சத்தில் அவ்வணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தசூழலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பேசியுள்ளார்.
ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா..?
பாகிஸ்தானின் முடிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் கம்ரான் அக்மல், “இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிபி இடம் ஐசிசி கூறியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களுடைய முடிவிலிருந்து பின்வாங்கக்கூடாது. ஆசியக் கோப்பை தொடர் ஹைப்ரிட் மாதிரியின் கீழ் நடத்தப்பட்டபோது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா? சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்றும், நடுநிலையான ஆடுகளத்தில் மட்டுமே விளையாடுவோம் என்றும் இந்தியா கூறியபோது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா?
இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும், பாகிஸ்தான் இந்தியாவில் எத்தனை முறை விளையாடியுள்ளது? நான் கூட சென்று விளையாடினேன். ஐ.சி.சி இந்த விஷயங்களைப் பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே யோசித்திருக்க வேண்டும். இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. அதுவெல்லாம் அரசியல் இல்லையா? அப்போதே ஐ.சி.சி இப்படியான அரசியலை முடிவுக்குக் கொண்டுவர நினைத்திருக்க வேண்டாமா?
கலப்பின மாதிரியில் விளையாடுவதற்கான இந்தியாவின் முடிவை நாங்கள் மதித்ததைப் போலவே, பிசிபியின் முடிவையும் ஐசிசி மதிக்க வேண்டும். விஷயங்கள் உச்சத்தை எட்டியிருந்தன. ஆசிய கோப்பையின் போது, அவர்கள் எங்கள் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து, பின்னர் கோப்பையை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் எங்களை அவமரியாதை செய்தனர். அப்போதெல்லாம் ஐசிசி என்ன செய்தது?” என்று கம்ரான் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.

