ரஞ்சிக்கோப்பை ஃபைனல்| சுபம் பண்டிர் அபார சதம்.. 284 ரன்களுடன் ஜம்மு-காஷ்மீர் வலுவான தொடக்கம்!
ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி வலுவான தொடக்கம் பெற்றுள்ளது. சுபம் பண்டிர் அபார சதம் அடிக்க முதல் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவித்துள்ளது. கர்நாடகா அணிக்கு எதிராக வரலாற்றை எழுத ஜம்மு-காஷ்மீர் அணி முயற்சிக்கிறது. பராஸ் டோக்ரா ரிட்டர்ய்ட் ஹர்ட்டாகி வெளியேறிய நிலையில், அப்துல் சமாத் 52 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.
அரையிறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றிபெற்ற ஜம்மு-காஷ்மீர் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கும், கர்நாடகா அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளன.
பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் ஜம்மு-காஷ்மீர் அணி, ரஞ்சிக்கோப்பை வென்று வரலாற்றை எழுத 8 முறை கோப்பை வென்ற கர்நாடகா அணியை வீழ்த்த வேண்டும்.
வலுவான தொடக்கம்..
கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜம்மு-காஷ்மீர் 18 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யாவர் ஹாசன் மற்றும் சுபம் பண்டிர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் 13 பவுண்டரிகளை விரட்டி 88 ரன்கள் குவித்த ஹாசன் அவுட்டாக, மறுமுனையில் 221 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்ற சுபம் பண்டிர் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் அணி வலுவாக தொடங்கியுள்ளது. சுபம் பண்டிர் 117 ரன்கள், அப்துல் சமாத் 52 ரன்கள் உடன் விளையாடிவருகின்றனர். கர்நாடகா அணியில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் கேப்டன் பராஸ் டோக்ரா ரிட்டர்ய்ட் ஹர்ட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

