World Record Alert| 42 பந்தில் சதமடித்தார் இஷான் கிஷன்.. சூர்யகுமார் புதிய சாதனை!
இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில், இஷான் கிஷன் 42 பந்தில் சதமடித்து அசத்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் 63 ரன்கள் அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரராக சாதனை படைத்தார். சஞ்சு சாம்சன் மீண்டும் தோல்வியடைந்தார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
மீண்டும் சொதப்பிய சாம்சன்.. சதமடித்த இஷான்!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களம்கண்டனர். சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், 5வது போட்டியிலும் மோசமாக செயல்பட்ட சஞ்சு 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றினார்.
மறுமுனையில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த அபிஷேக் 16 பந்தில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்தினர்.
26 பந்தில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ் 63 ரன்னில் ஸ்டம்ப் அவுட் மூலம் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத இஷான் கிஷன் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து 42 பந்தில் சதமடித்து அசத்தினார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருடைய முதல் சதமாகும்..
உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..
நடந்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்து அசத்தினார். ரோகித் சர்மா, விராட் கோலிக்கு பிறகு 3000 டி20 ரன்களை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரராக சூர்யகுமார் யாதவ் உலகசாதனை படைத்தார். முதலிடத்தில் 1947 பந்துகளில் அடித்து யுஏஇ வீரர் முகமது வாசீம் இருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி 1822 பந்துகளில் 3000 ரன்களை கடந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
அதிவேகமாக 3000 டி20 ரன்கள்:
1. சூர்யகுமார் யாதவ் - 1822
2. முஹம்மது வசீம் - 1947
3. ஜோஸ் பட்லர் - 2068
4. ஆரோன் பிஞ்ச் - 2077
5. டேவிட் வார்னர் - 2113
6. ரோகித் சர்மா - 2149
7. விராட் கோலி - 2169

