இந்தியாவைச் சுருட்டிய IRE.. வெற்றிக்கு வித்திட்ட Head Coach.. சில மணி நேரத்தில் ராஜினாமா!
அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அவ்வணியுடன் டி20 தொடரில் பங்கேற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரண்டிலுமே இந்திய அணி தோல்வியுற்று, அயர்லாந்துக்கு எதிராகப் புதிய சாதனை படைத்தது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வடிவத்திலும் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து பெறும் முதல் தொடர் வெற்றியும் இதுவே ஆகும். இப்படியான சூழலில், அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன், அடுத்த சில மணிநேரங்களிலேயே அப்பதவியிலிருந்து விலகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2022-ஆம் ஆண்டு ஹென்ரிச் மாலன் பொறுப்பேற்றார். இந்த ஒப்பந்தம் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. அவர் பொறுப்பில் இருந்த காலத்தில், அயர்லாந்து அணி 2022, 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று டி20 உலகக் கோப்பைகளுக்குத் தகுதி பெற்றது. அணியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, 2022-இல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி அசத்தியது. மேலும், 2024-இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அதுமட்டுமின்றி, பெல்ஃபாஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வென்று, சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியையும் பதவி செய்தது. தவிர, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளையும் வீழ்த்தியது. தற்போது இந்திய அணிக்கு எதிரான வெற்றியும் இதில் அடக்கம்.
இவையெல்லாம், மாலனின் பயிற்சியின்கீழ் சாத்தியமானவையாகும். இந்த நிலையில்தான், ஹென்ரிச் மாலன் அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மாலனின் ஒப்பந்தம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கவிருந்தது. ஆனால் 45 வயதான மாலன், முன்கூட்டியே விலக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்று, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதிபெற அணியைத் தயார்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று மாலன் நம்பியதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் மாலனின் சிறந்த சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளது. "நன்றி ஹென்றிச். விடைபெறுவதற்கு இதைவிட ஒரு சிறந்த வழி இருக்க முடியாது! உங்களது அடுத்த பயணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது புதிய தலைமை பயிற்சியாளரை அறிவித்துள்ளது. முன்னாள் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கேரி வில்சன் புதிய தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.

