IPL | KKRலிருந்து வெளியேற்றம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைந்த வங்கதேச வீரர்!
ஐபிஎல்லில் இருந்து விடுவிக்கப்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைந்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளும், தாக்குதல்களும் அதிகரித்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை, பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில் அணியிலிருந்து வெளியேற்றியது. இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததுடன், ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது. தவிர, ஐபிஎல் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்பவும் அந்நாட்டில் தடை விதித்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுவதற்கான வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த நிலையில், ஐபிஎல்லில் இருந்து விடுவிக்கப்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைந்துள்ளார். ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய உடனேயே, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அவர் இணைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், முஸ்தாபிசுர் ரஹ்மான் அடுத்த போட்டித் தொடரில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிஎஸ்எல்லுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர், கடைசியாக லாகூர் க்வாலண்டர்ஸ் அணியில் விளையாடினார்.

