வங்கதேசத்திற்கு தக்க பதிலடி.. BPL தொடரிலிருந்து விலகிய இந்திய தொகுப்பாளர்!
இந்திய விளையாட்டுத் தொகுப்பாளரான ரிதிமா பதக், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் (பிபிஎல்) ஒளிபரப்பு குழுவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலம் எடுத்திருந்த நிலையில், அவரை விடுவிக்க வேண்டும் என எதிர்ப்பலைகள் எழுந்தன. இதையடுத்து பிசிசிஐ அவரை, உடனே நீக்க வேண்டும் என அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும், தாக்குதல்களும் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததுடன், ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது. தவிர, ஐபிஎல் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்பவும் அந்நாட்டில் தடை விதித்தது.
இந்த விவகாரம் இரு நாட்டு உறவுகளிடையே மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய விளையாட்டுத் தொகுப்பாளரான ரிதிமா பதக், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் (பிபிஎல்) ஒளிபரப்பு குழுவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தால் (பிசிபி) தாம் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அவர் நிராகரித்தார். இதுகுறித்து அவர், “நான் BPLலிலிருந்து நீக்கப்பட்டேன் என்று ஒரு கதை பரவி வருகிறது. அது உண்மையல்ல. நான் விலகுவதற்கு ஒரு தனிப்பட்ட முடிவை எடுத்தேன். எனக்கு, என் தேசம் எப்போதும் முதன்மையானது. மேலும் நான் எந்த ஒரு பணிக்கும் மேலாக கிரிக்கெட் விளையாட்டை மதிக்கிறேன். பல ஆண்டுகளாக நேர்மை, மரியாதை மற்றும் ஆர்வத்துடன் இந்த விளையாட்டுக்குச் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது மாறாது. நேர்மைக்காகவும், தெளிவுக்காகவும், விளையாட்டின் உணர்விற்காகவும் நான் தொடர்ந்து நிற்பேன்" என அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுவதற்கான வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

