ஐபிஎல் ஏலம் : எந்தெந்த வீரர்களுக்கு மவுசு அதிகம்? - யார் யார் ஏலம் போவார்கள்? முழு விவரம்!
2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி, மே மாதம் இறுதிவரை 19வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கிறது, இந்த போட்டிகளுக்கான வீரர்களை வாங்கும் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே ஐபிஎல் அணிகள், முக்கிய வீரர்களை டிரேடிங் செய்ய, இந்த ஏலத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த மினி ஏலத்தில் 350 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
10 அணிகளில் காலியாக உள்ள 77 இடங்களுக்கான மினி ஏலம் நடைபெறும் சூழலில், அணிகளின் மொத்த ஏலத்தொகை 237 கோடியே 55 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா அணியிடம் 64 கோடியே 30 லட்ச ரூபாயும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 43 கோடியே 40 லட்ச ரூபாயும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 25 கோடியே 50 லட்ச ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரூ.22 கோடியே 95 லட்ச ரூபாயும், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் - ரூ.21கோடியே 8 லட்ச ரூபாயும் கையிருப்பு உள்ளது.
ஏலம் போகக்கூடிய வீரர்கள் யார் யார்
ஐபிஎல் மினி ஏலம் தொடர்பான விவாதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அனைத்து அணிகளுக்கும் போட்டிகளை நல்ல முறையில் ஃபினிஷ் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர் மற்றும் ஹிட்டர்கள் தேவை. அதையேதான் அணிகளும் விரும்பும். அதன்படி, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டன், இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர், மேற்கிந்திய தீவைச் சேர்ந்த ஜேசன் ஹோல்டர், நியூசிலாந்து அணியின் பிரேச்வெல், தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இலங்கை அணியின் மதிஷா பதிரானா, நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி மற்றும் ஜேமிசன், தென் ஆப்ரிக்கா அணியின் அன்ரிச் நார்ட்ஜே, வங்கதேச அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்திய அணியின் ஆகாஷ் தீப் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்குப்பின் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுகிறது. மேலும், போட்டியின் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுத்தால் மட்டுமே அணிகள் வெற்றி பெறமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் அணிகளில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்தாலும் சப்ளை குறைவாகவே உள்ளது. இதனால், நடப்புத் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னாய், ராகுல் சாஹர் மற்றும் இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் நல்ல தொகைக்கு ஏலம்போவார்கள் என கூறப்படுகிறது.
விக்கெட் கீப்பர்களைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் ஜானி பிரிஸ்டோவ், ஜேமி ஸ்மித், நியூசிலாந்து அணியின் டிம் சீஃபார்ட் ஆகியோருக்கும் மவுசு அதிகளவில் உள்ளது. இதுதவிர, நியூசிலாந்தின் டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தென் ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஷார்ட், கூப்பர் கானோலி, இந்தியாவின் சர்பரஸ் கான், பிரித்வி ஷா ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம்போவார்கள் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
யார் யாரை எந்த அணியினர் எவ்வளவு விலைக்கு ஏலம் எடுத்தார்கள் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
