IPL 2026 | பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் இறுதிப்போட்டி.. ரசிகர்கள் உற்சாகம்!
கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் 5 லீக் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது.
இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம். மேலும், இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இந்தச் சூழலில், சின்னசாமி மைதானத்தில் இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப் போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை புனேவில் விளையாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 35,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடகா முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் சீசனின் பிளேஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பது அவர்களுக்கு இரட்டைச் சந்தோஷத்தைத் தந்துள்ளது. இதற்கிடையில், ஐந்து போட்டிகளுக்கு மேலதிகமாக, ஆர்சிபி அணி, ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு லீக் போட்டிகளை விளையாடும். இது அவர்களின் இரண்டாவது சொந்த மைதானமாக செயல்படும். அதேநேரத்தில், இறுதிப்போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால், மீண்டும் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

