பெங்களூரு | சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகள்.. அரசு அனுமதி.. ரசிகர்கள் உற்சாகம்!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம்.
இந்தசூழலில் சின்னசாமி மைதானத்தில் இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப்போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை புனேவில் விளையாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை தொடர்பான விரிவான திட்டத்தை, ஏற்கனவே நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. முன்னதாக, சின்னசாமி மைதானத்தில்தான் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடக்கும் என்றும், அதன் பாரம்பரிய பெருமையை இழக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருந்தார். மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

