WT20 WC லிஸ்ட்| முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்த நந்தினி ஷர்மா!
12 அணிகள் மோதும் டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 12ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதற்கேற்ற இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மகளிர் ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நந்தினி ஷர்மா முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
12 அணிகள் மோதும் டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 12ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது. இவ்விரண்டுக்குமான வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராதா யாதவ் மற்றும் யாஸ்திகா பாட்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார், தேர்வுக்குழுத் தலைவர் அமிதா சர்மா மற்றும் பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா ஆகியோர் கலந்துகொண்ட தேர்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த அணி இறுதி செய்யப்பட்டது. 2025 செப்டம்பரில் இடது முழங்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, யாஸ்திகா கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டிகளைத் தவறவிட்டார்.
தற்போது அறுவைசிகிச்சைக்குப் பின்னர் குணமாகிய நிலையில் அவர் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல், ராதா யாதவும் கிட்டத்தட்ட ஒருவருடத்திற்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது விளையாடியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாங்காக்கில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்குத் தலைமை தாங்கி பட்டத்தை வென்ற நிலையில், தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது சிறப்பாகச் செயல்பட்ட அனுஷ்கா ஷர்மா மற்றும் பார்தி ஃபுல்மாலி ஆகியோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, இந்திய அணியானது தீப்தி ஷர்மா, ஸ்ரீசரணி மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரையும் கொண்டுள்ளது. இன்னொரு புறம், 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் நந்தினி ஷர்மா முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். WPL தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிக்காக ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதன் மூலமும், அவரது சிறப்பான பந்துவீச்சு மூலமும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேநேரத்தில், காஷ்வி கௌதம் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டி20ஐ தொடர் மே 28 அன்று தொடங்கும் நிலையில், ஜூன் 14ஆம் தேதி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா தனது தொடக்கப் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்திய மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (WK), ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கவுட், ஸ்ரேயங்கா பட்டில், ஷ்ரேயங்கா பட்டில்

