’ப்ளேயிங் 11 சம்பவக் கிளப்’ - சொந்த மண்ணில் தொடர்ந்து 17 தொடர்..டெஸ்ட்டில் வீறுநடைபோடும் இந்திய அணி!

2012 - 2013 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உடன் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபியில் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அப்போது ஆரம்பித்த, சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர் வெற்றிப் பயணம் தற்போது வரை தொடர்கிறது.
indian test cricket
indian test cricketpt web

IND vs ENG 

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-0 என வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரது அட்டகாசமான ஆட்டத்தால் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

தொடரின் 4வது டெஸ்ட் போட்டியானது முன்னாள் இந்திய கேப்டன் தோனி பிறந்த இடமான ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரையும் வென்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 17 ஆவது முறை சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்திய அணியின் கடைசி தோல்வி

கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான டெஸ்ட்டில் தொடரை இழந்திருந்தது. அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக அலெஸ்டர் குக்கும், இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனியும் செயல்பட்டனர். அப்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பிறகு நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஒரு தொடரையும் ட்ரா கூட செய்யவில்லை. அனைத்திலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஆரம்பித்த வெற்றி

அதன்பிறகு 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உடன் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபியில் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அந்த தொடரில் இந்திய அணியின் முரளிவிஜய் 7 இன்னிங்ஸ்களில் 430 ரன்களை குவித்து அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த இரு இடங்களையும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்திருந்தனர். 7 இன்னிங்ஸ்களில் 419 ரன்களை அடித்து புஜாரா இரண்டாவது இடத்திலும், 6 இன்னிங்ஸ்களில் 326 ரன்களை குவித்து தோனி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் தோனி இரட்டை சதம் அடித்து அசத்தி இருந்தார். டெஸ்ட் வரலாற்றில் அவரது முதல் இரட்டை சதமாக இது அமைந்தது.

தற்போது இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வின், அன்றைய டெஸ்ட் தொடரில் ஹீரோவாக திகழ்ந்தார். 8 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 29 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த சர் ஜடேஜா 24 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருந்தார்.

தொடர் வெற்றிகளில் திளைத்த இந்தியா

அப்போது ஆரம்பித்த, சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர் வெற்றிப் பயணம் தற்போது வரை தொடர்கிறது.

2013 - 14 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா, 2015-16 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா அணியுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில், 6 இன்னிங்ஸ்களில் 266 ரன்களை எடுத்து ரஹானே அதிகபட்ச ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். பந்துவீச்சிலும் அஷ்வின் 7 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 31 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இந்த தொடரிலும் உறுதுணையாக இருந்த ஜடேஜா 23 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

மேலோங்கிய அஷ்வின் - ஜடேஜா கூட்டணி 

அடுத்து 2016 -17 ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து உடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றிருந்தது. இதிலும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. 6 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்த, ஜடேஜா 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் புஜாரா 6 இன்னிங்ஸ்களில் 373 ரன்களைக் குவித்திருந்தார். 347 ரன்களை எடுத்து ரஹானே இரண்டாவது இடத்திலும், கோஹ்லி 309 ரன்களை எடுத்து மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 238 ரன்களை எடுத்து நான்காவது இடத்திலும் ஆதிக்கம் செலுத்தினர்.

ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய இந்தியா

2016 - 2017 ஆம் ஆண்டுகளில் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மூன்று தொடரையும் வென்று ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் வென்ற நிலையில், 5 ஆவது போட்டி ட்ரா ஆனது. தொடரில் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த விராட், 8 இன்னிங்ஸ்களில் 655 ரன்களைக் குவித்தார். அந்த தொடரில் மட்டும் 72 பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்தை திணறடித்தார் கோலி. பந்துவீச்சில் வழக்கம் போல் அஷ்வின், ஜடேஜா கூட்டணிக்கே வெற்றி. 10 இன்னிங்ஸ்களில் 28 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்த, 26 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் ஜடேஜா.

அதே ஆண்டில் பங்களாதேஷ் உடனான ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித் 8 இன்னிங்ஸ்களில் 499 ரன்களை குவித்திருந்தாலும் பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது இந்திய அணி. அஷ்வினை ஜடேஜா பின்னுக்குத் தள்ளி இருந்தார். 8 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்களை ஜடேஜா வீழ்த்த, அஷ்வின் 21 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

சம்பவக் கிளப்பில் இணைந்த ஷமி

2017 - 2018 ஆம் ஆண்டில் இலங்கை உடனான 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கிலும், 2018 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியுடனான ஒரு டெஸ்ட்போட்டியையும் வென்றிருந்தது இந்திய அணி. தொடர்ந்து 2018 - 19 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 2019 - 20 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா. இந்த தொடரில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா 4 இன்னிங்ஸ்களில் 529 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார். இரண்டாவது இடத்தில் மயங்க் அகர்வால் 340 ரன்களையும், மூன்றாவது இடத்தில் விராட் 317 ரன்களையும் குவித்திருந்தனர்.

பந்துவீச்சில் சம்பவக்கார கிளப்பில் ஷமியும் இணைந்துகொண்டார். அஷ்வின் 6 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்களையும், முகம்மது ஷமி மற்றும் ஜடேஜா தலா 13 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

அதே ஆண்டில் பங்களாதேஷ் உடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, 2020 - 21 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்தத் தொடரையும் 3-1 என்ற் கணக்கில் வீழ்த்தி கோப்பையை தட்டித் தூக்கியது. அஷ்வின் 8 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அக்‌ஷர் படேல் 6 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

ஆஸியை நாசமாக்கிய சுழல் கூட்டணி

அடுத்து 2021 - 22 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அதே ஆண்டில் இலங்கை உடனான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

2022 - 23 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அதிலும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதிலும் விக்கெட் வேட்டை ஆடிய அஷ்வின் ஜடேஜா கூட்டணி 8 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 47 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது. அஷ்வின் 25 விக்கெட்களையும், ஜடேஜா 22 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

கடைசியாக தற்போது இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட உடனான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்த பிறகு முதல் முறையாக ஒரு டெஸ் தொடரில் தோல்வியை தழுவியுள்ளது. பாஸ்பால் கிரிக்கெட்டால் உலக கிரிக்கெட்டை அதிரவைத்த இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பமான விளங்கியுள்ளது இந்தியா.

சாதனை மழையில் அஷ்வின்

மூத்தவீரர்களான கோலி, பும்ரா, ஷமி, கேஎல் ராகுல் முதலிய வீரர்கள் இல்லாமல் யஷஸ்வி, ஜுரேல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் முதலிய வீரர்களை வைத்து தொடரை வென்று அசத்தியுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்திய பிறகு அவ்வணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார் அஷ்வின். இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திவரும் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். 72 வெற்றிகளில் சச்சின் முதலிடத்திலும், 59 வெற்றிகளில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் அஸ்வின் 58 வெற்றிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். அதேபோன்று அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 35 முறை வீழ்த்தி, முன்னாள் வீரர் கும்ப்ளேவின் ரெக்கார்டை சமன் செய்திருக்கிறார். இப்படி, தொடர்ந்து அவருடைய சாதனைப் பட்டியலும் நீண்டபடியே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com