தொடரும் இந்தியாவின் கனவு.. களமிறங்கும் 4 இந்திய வீரர்கள்.. ஏமாற்றத்தைத் தணித்த FIFA!
நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடர், விறுவிறுப்பை எட்டிவரும் நிலையில், இந்தியாவுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிக்க இந்தியாவின் கனவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதற்கு முன்னர்வரை உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முறை 48 அணிகள் பங்கேற்றுள்ளன. அதேநேரத்தில், இந்த தொடரில் 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்குப் பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல்முறையாக இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு புறம், கால்பந்து உலகையே கட்டியாண்ட 3 ஜாம்பவான்களான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மற்றும் 2 பேருக்கு நிகராக உருவெடுத்த பிரேசில் அணியின் நெய்மர் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படி, நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடர், விறுவிறுப்பை எட்டிவரும் நிலையில், இந்தியாவுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிக்க இந்தியாவின் கனவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்பிரீத் சிங்
நியூசிலாந்தின் சர்பிரீத் சிங், கத்தாரின் தாசின் முகமது ஜம்ஷித், டிஆர்காங்கோவின் சாமுவேல் முத்துசாமி மற்றும் ஆஸ்திரேலியாவின் நிஷான் வேலுப்பிள்ளை ஆகியோர்தான் தத்தம் நாடுகளுக்காக விளையாட இருப்பினும், அவர்கள் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பஞ்சாபின் ஜலந்தரைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு ஆக்லாந்தில் பிறந்த சர்பிரீத் சிங், பல ஆண்டுகளாக நியூசிலாந்து கால்பந்தில் அணியில் ஒரு முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.
தாசின் முகமது ஜம்ஷித்
அடுத்து, கேரளாவைச் சேர்ந்த பெற்றோருக்கு கத்தாரில் பிறந்தவர்தான் தாசின் முகமது ஜம்ஷித். 19 வயதான இவர், கத்தாரின் அல் துஹைல் அணிக்காக விளையாடி வருகிறார். 2024-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேசப் போட்டியில் அறிமுகமான இவர், தற்போதைய தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.
சாமுவேல் முத்துசாமி
அடுத்து, பிரான்சில் பிறந்த சாமுவேல் முத்துசாமி, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்தோ-குவாடலூப்பியன் சமூகத்தைச் சேர்ந்தவராக அறியப்படும் இவர், லியோபார்ட்ஸ் அணிக்காக நடுக்கள வீரராக இறங்கி விளையாடி வருகிறார். டி.ஆர். காங்கோ அணிக்காக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் திரும்பியுள்ளார்.
நிஷான் வேலுப்பிள்ளை
இறுதியாக, ஆஸ்திரேலியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய தாக்குதல் வீரர்களில் ஒருவராக அறியப்படும் நிஷான் வேலுப்பிள்ளை, மெல்போர்னில் பிறந்தவர். அவரது தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், அதேசமயம், அவரது தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ-இந்தியர் ஆவார். மெல்போர்ன் விக்டரி அணியில் விளையாடி வரும் அவர். உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இறுதிக்கட்டத்தில் களமிறக்கப்பட்ட அவர், களமிறங்கிய ஏழு நிமிடங்களிலேயே கோல் அடித்து, 3-1 என்ற வெற்றியை உறுதிசெய்ய உதவியதைத் தொடர்ந்து, இந்த உலகக்கோப்பையில் 26 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் அவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்தியா இல்லாவிட்டாலும் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது.

