IND Vs SA T20 | சரிந்த அணியை அதிரடியால் மீட்ட ஹர்திக்.. பந்துவீச்சிலும் இந்தியா அபாரம்; பும்ரா சாதனை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.
கட்டாக்கில் இன்று தொடங்கியுள்ள முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஏற்கெனவே சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் களமிறக்காதது விமர்சிக்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா (17), ஷுப்மன் கில் (4), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதும் விமர்சனத்துக்குள்ளானது.
என்றாலும் திலக் வர்மா (26), அக்ஷர் படேல் (23) ஆகியோரின் பங்களிப்பால் அணி ஓரளவு நிமிர்ந்தது. அதிலும், கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். அவருடைய அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். தென்னாப்ரிக்கா அணி தரப்பில் நிகிடி 3 விக்கெட்களையும், லூதோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி, தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிகாக் டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்ப, கேப்டன் மார்க் ராம் மற்றும் ஸ்ட்ப்ஸ் ஆகியோர் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், இடையில் களமிறங்கிய பிரிவிஸ் 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். எனினும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்ட அவ்வணியின் தோல்வி முகம் உறுதியானது. இறுதியில் அவ்வணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப், பும்ரா, வருண், அக்ஷர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஹர்திக் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக, இந்தப் போட்டியில் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், முதல் இந்திய பந்துவீச்சாளராக டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அர்ஷ்தீப் சிங்கை தொடர்ந்து இரண்டாவது இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் 100வது விக்கெட்டை பும்ரா கைப்பற்றியுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

