U19 Asia Cup | ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. எளிதில் பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா!
2025 யு19 ஆசியக்கோப்பை தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை, இந்திய அணி எளிதில் சுருட்டி வெற்றி கண்டது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக, இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டி அணிகளை வென்றிருந்தன. இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் அணி மலேசிய அணியையும் சுலபமாக வென்றிருந்தன. இதனால், இன்றைய போட்டி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்குச் சவாலாக இருந்தது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இதற்கிடையே மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் 49ஆகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் இரட்டைச் சதத்தைத் தவறிவிட்ட இந்தியாவின் புதிய புயல் வைபவ் சூர்யவன்ஷியும், கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் தொடக்க வீரர்களாகக் களம்புகுந்தனர்.
தொடக்கத்திலேயே ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களைக் குஷிபடுத்திய சூர்யவன்ஷி, மேலும் ஒரு ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ஆரோன் ஜார்ஜ், கேப்டனுன் கைகோர்த்தார். இருவரும் பொறுமையைக் கடைப்பிடித்த நிலையில், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கும் விரட்டினர். ஆனாலும், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ஆயுஷ் 38 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விகான் மல்கோத்ராவும், வேதந்த் திரிவேதியும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினாலும், விக்கெட் கீப்பரான அபிஜியன் குண்டு சற்றுநேரம் பொறுமை காத்தார். அவர் தன் பங்குக்கு 22 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் கனிஷ்க் செளகான் அதிரடியாய் 46 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க இந்திய அணி 200 ரன்களைத் தாண்டியது. இறுதியில் இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 85 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது சியாம், அப்துல் சுபன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் சபிக் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, தொடக்கம் முதலே தடுமாற்றத்தைச் சந்தித்தது.
எனினும் கேப்டன் பர்ஹான் யூசுப்பும் ஹுசயிபா அக்சனும் சற்றே தாக்குப் பிடித்து நின்று விளையாடினர். ஆனால் அந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யூசுப் 23 ரன்களில் வெளியேறினார். அக்சன் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களுக்குப் பிறகு வந்திறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்ததால், அவ்வணியின் தோல்வி உறுதியானது. தவிர, குறைந்த பந்துகளுக்கு கூடுதல் ரன்களை எடுக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த பதற்றத்திலேயே அவர்கள் விரைவாக விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி, 41.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரனும், கனிஷ்க் செளகானும் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். கிஷான் குமார் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். இறுதியாக இந்திய அணி, மலேசியாவை டிசம்பர் 16ஆம் தேதி சந்திக்கிறது.

