IND Vs WI 1st Test: சிராஜ், பும்ரா அபாரம்.. கில், ராகுல் நிதானம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த ஷுபமன் கில்லே, இந்திய தொடருக்கும் முதல்முறையாக வழிநடத்துகிறார். அந்த வகையில் இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டும் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்தனர். எனினும், ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதேபோல் தமிழக வீரர் சாய் சுதர்சன் 7 ரன்களில் ரோஸ்டன் சாஸ் பந்துவீச்சில் எல்பிடளியூ முறையில் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் ஜெய்ஸ்வாலுடன் கைகோர்த்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது. கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.